தமிழ்நாடு

சேனல்களின் கட்டண உயர்வு: திரும்பப்பெற கோரி கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

webteam

தனியார் சேனல்களை கண்டுகளிப்பதற்கான மாதாந்திர கட்டணத்தை 200 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை மத்திய அரசு உயர்த்துவதை கண்டித்து, கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இன்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பாக, அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் வெள்ளைச்சாமி தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில், “மத்திய அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய விலைக்கொள்கை அமலாக்கத்தின் மூலம் பொதுமக்கள், சிறுவர்கள் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு சேனல்களின் விலை ஏற்றப்பட்டு உள்ளது.

குறிப்பாக ஸ்டார் விஜய் குரூப்பின் சேனல்களை காண்பதற்கான விலை 25 ரூபாயிலிருந்து 43 ரூபாயாகவும், சன் குழுமம் 40 ரூபாயிலிருந்து 45 ரூபாயாகவும், ஜீ தமிழ் 12 ரூபாயிலிருந்து 19ஆகவும், கலர்ஸ் குரூப் 8 ரூபாயிலிருந்து 15 ரூபாயாகவும் விலை உயர்த்தி உள்ளனர். இப்படி இன்னும் பல சேனல்கள் விலை ஏற்றத்தை செய்துள்ளது. இத்தகைய விலை ஏற்றத்தால், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாவர். எனவே கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.

உடனடியாக மத்திய அரசு இதை கவனத்தில்கொள்ள வேண்டும் என்றும் போராட்டக்குழு அறிவுறுத்தியது.