நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், அதிமுக, திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்கின்றனர்.
விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. ராதாமணி மறைவையொட்டி அத்தொகுதி காலியாக உள்ளது. இதேபோல, நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அந்த தொகுதியும் காலியாக உள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் வருகிற 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.
அதிமுக கூட்டணியில் இரு தொகுதிகளிலும் அதிமுகவே களம் இறங்குகிறது. விக்கிரவாண்டியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட காணை ஒன்றிய அதிமுக செயலாளர் முத்தமிழ்செல்வனும், நாங்குநேரியில், நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர் வெ.நாராயணனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்கின்றனர்.
திமுக கூட்டணியில், விக்கிரவாண்டி தொகுதியில் விழுப்புரத்தைச் சேர்ந்த புகழேந்தி போட்டியிடுகிறார். நாங்குநேரி தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கு ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களும் இன்று தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்கின்றனர். விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி, திரைப்பட இயக்குநர் கௌதமன் உள்பட 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நாங்குநேரி தொகுதியில் சுயேச்சைகள் உள்பட 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றனர். வேட்புமனுக்கள் மீது நாளை பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களை திரும்பப்பெற 3-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.