தமிழ்நாடு

டிசம்பர் 1 முதல் சுங்கச் சாவடிகளில் கட்டாயமாகிறது ‘ஃபாஸ்டேக்’ முறை 

டிசம்பர் 1 முதல் சுங்கச் சாவடிகளில் கட்டாயமாகிறது ‘ஃபாஸ்டேக்’ முறை 

webteam

இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்காக FASTag டிஜிட்டல் முறை வரும் ஒன்றாம் தேதி முதல் கட்டாயமாகிறது. FASTag மூலம் கட்டணம் செலுத்துவது எப்படி? என்பது குறித்த சில விவரங்கள் கிடைத்துள்ளன.

சுங்கச்சாவடிகளை கடக்கும்போது வாகனஓட்டிகள் செலுத்த வேண்டிய கட்டணத்தை இணையவழியில் மாற்றுவதே FASTag முறையாகும். டிசம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து இம்முறை கட்டாயப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சுங்கச்சாவடிகள், சில வங்கிக் கிளைகளில் விண்ணப்பித்து FASTagஐ பெறலாம். 

வாகனத்தின் பதிவுச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அடையாள அட்டை மற்றும் முகவரிக்கான அடையாள அட்டை ஆகியவற்றை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். வங்கிகளைப் பொறுத்து 100 ரூபாய் முதல் 500 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து FASTag ஸ்டிக்கரை பெற்ற பிறகு Google Play மூலம் FASTag செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில் 100 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 

அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகு, வாகனத்தில் ஒட்டப்படும் FASTag ஸ்டிக்கர் சுங்கச்சாவடிகளில் ஸ்கேன் செய்யப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். ஒவ்வொரு சுங்கச்சாவடியை கடக்கும்போதும் FASTag walletலிருந்து தாமாக கட்டணம் எடுத்துக் கொள்ளப்படும். FASTag கணக்கு இல்லாதவர்கள் இரு மடங்கு கட்டணம் செலுத்திய பிறகே சுங்கச்சாவடிகளில் அனுமதிக்கப்படுவார்கள். சுங்கச்சாவடிகளில் இருந்து 10 கி.மீ-க்குள் வசிப்பவர்களுக்கு கட்டணம் குறைத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் புதிய முறையில், பயன்பாடுகள் என்று பார்த்தால், கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட நேரம் சுங்கச்சாவடிகளில் காத்திருப்பதை தவிர்க்கலாம். கட்டணத் தொகையை கையில் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. சுங்கச்சாவடிகளில் ஆன்லைனில் வசூலிக்கப்பட்ட கட்டண விவரம், SMS மூலம் தெரிவிக்கப்படும். இணைய வழியில் பணபரிவர்த்தனை செய்யப்படுவதால் காகிதப் பயன்பாடு குறையும். வாகனங்கள் முழுமையான கண்காணிப்புக்குள் கொண்டு வரப்படுவதால், குற்றங்களை குறைக்க முடியும் என நம்பப்படுகிறது. 

இந்தப் பயன்பாடுகள் ஒருபுறம் இருந்தாலும், இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் சில கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன. தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்படுவது தடைபட்டால் என்ன ஆகும்? கிராமப்புறங்களைச் சார்ந்த அனைவரும் இணைய பயன்பாட்டை அறியாத நிலையில், டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் FASTag திட்டத்தை அமல்படுத்துதல் சாத்தியமா? இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் போதிய கட்டணத் தொகை இல்லை எனில் என்ன‌ ஆகும் என்பன போன்ற சந்தேகங்களும் கேள்விகளாக முன்வைக்கப்படுகின்றன.