சென்னையில் 161 நாட்களுக்குப் பிறகு பேருந்து சேவை தொடங்கியது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக பொதுப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று முதல் மாவட்டங்களுக்குள்ளான அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு தமிழக அரசு அனுமதியளித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளது.
சென்னையில் 100 சதவீத போக்குவரத்து ஊழியர்களுடன் 3 ஆயிரம் பேருந்துகள் வரை இயக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும், மக்கள் கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் சென்னை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. மாவட்டத்திற்குள் மட்டுமே இயக்கினால் லாபம் கிடைக்காது என்று கூறியுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள், இருக்கைகள் அனைத்தையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.