சென்னையிலிருந்து திருச்சி, மதுரை போன்ற தொலைதூரங்களுக்கான பேருந்து சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இந்த தடை உத்தரவு ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை 6 மணி வரை கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர் சென்னையில் இருந்து நேற்று முதலே சென்று கொண்டிருக்கின்றனர். குறைவான அளவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால் நேற்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. இருந்தாலும் தற்போது வழக்கம்போல் கூட்டம் குறைந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், சென்னையில் இருந்து திருச்சி மதுரை வரை இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவை தற்போது நிறுத்த செய்யப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவுக்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ளதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து தொலைதூர பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு வருகின்றன. அதாவது, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு பேருந்துகள் சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, ஆரணி, திருப்பத்தூர், அரக்கோணம், தர்மபுரி போன்ற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.