சென்னையின் பல்வேறு இடங்களில் மாநகர பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சென்னை மெரினா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே சென்னையின் பல்வேறு இடங்களில் மாநகர பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புதுவண்ணாரப்பேட்டையில் மாநகரப் பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். வேப்பேரியிலும் 2 மாநகர பேருந்து மீது கல்வீசப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் பாரிமுனையில் இருந்து தரமணி நோக்கி ராயப்பேட்டை வழியாக சென்ற மாநகரப் பேருந்து மீதும் அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
திமுக போராட்டம் குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஆதிமனிதர்கள் தான் கல்லை பயன்படுத்தினார்கள், திமுக ஆதி காலத்திற்கு திரும்பி விட்டதா? என கேள்வி எழுப்பினார்.