தமிழ்நாடு

புரெவி புயல் - கனமழை: உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி

webteam

புயல் மழையால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புரெவி புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு 10 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன். இப்புயலால் 37 பசு மாடுகள், 4 எருமை மாடுகள், 4 எருதுகள், 28 கன்றுகள், 123 ஆடுகள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாயும், எருது ஒன்றுக்கு 25 ஆயிரமும், கன்று ஒன்றுக்கு 16 ஆயிரமும் ஆடு ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

75 குடிசை வீடுகள், 8 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 1725 குடிசை வீடுகள், 410 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும். அதேபோல், புயல் பாதித்த மாவட்டங்களில் மீட்பு, நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.