சென்னையில் உள்ள ஏடிஎம்களில் ஸ்கிம்மர் கருவி மூலம் வாடிக்கையாளர்களின் பணத்தை திருடி வந்த பல்கேரிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
பணத்தை வங்கியில் செலுத்தினால், அதற்கு முழு பாதுகாப்பு கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. ஆனால் அந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாக, சென்னையில் அரங்கேறி இருக்கிறது ஒரு மோசடி சம்பவம். இந்த நூதன பண மோசடியில் ஈடுபட்டவர்கள், நம்ம ஊர் ஆட்கள் இல்லை. வெளிநாட்டவர்கள் என்பதுதான் அதிர்ச்சியான செய்தி.
சென்னை கண்ணகி நகரில் உள்ள ஏடிஎம் மையத்தில், சந்தேகத்திற்கிடமான வகையில் 3 நபர்கள் நீண்ட நேரமாக நின்றிருந்தனர். அங்கு ரோந்து வந்த காவலர்கள், இயல்புக்கு மாறாக ஏதோ ஒன்று நடப்பதை உணர்ந்தனர். மூவரையும் அழைத்து விசாரித்தபோது, தாங்கள் பல்கேரிய நாட்டினர் என்றும், ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்ததாகவும் கூறியுள்ளனர்.
முரணான தகவல்களை அளித்ததால், அவர்களின் மீதான சந்தேகம் போலீசாருக்கு வலுத்துள்ளது. நள்ளிரவில் ஆட்டத்தை தொடங்கிய காவலதுறையினர், அவர்கள் தங்கியிருந்த நட்சதிர விடுதி அறையில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், மோசடிக்கு பயன்படுத்தப்படும் ஸ்கிம்மர் கருவிகள், 40 போலி ஏடிஎம் அட்டைகள், பல ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி, லேப்டாப், செல்ஃபோன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
ஒரு சிறு சந்தேகம் கூட வராமல் மோசடி செய்வதற்கு, பக்காவான ஒரு செட்அப்பையே அவர்கள் உருவாக்கி வைத்திருந்தது காவலர்களுக்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது. இதையடுத்து, பல்கேரியாவைச் சேர்ந்த நிகோலோ, போரிஸ், லியூம்பாபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஏடிஎம் கார்டு மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பல்கேரியாவில் ஆள்நடமாட்டம் இல்லாத ஏடிஎம் மையங்களை தேர்வு செய்வதே இவர்களின் முதல்வேலை. அதில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில், பணம் எடுக்கவரும் வாடிக்கையாளர்களின் ரகசியத் தகவல்களைத் திருடுவதற்காக, ஸ்கிம்மர் என்ற கருவியை பொருத்துவது இவர்களின் முதல் திட்டம். அவ்வாறு வெளிநாட்டில் திருடப்பட்ட தகவல்களுடன் சென்னை வந்த இவர்கள், அதை வைத்து 40க்கும் மேற்பட்ட போலி அட்டைகளைத் தயாரித்துள்ளனர்.
அதைப் பயன்படுத்தி சென்னையில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் லட்சக்கணக்கில் பணம் எடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபாணியில் மோசடி செய்த பல்கேரியாவைச் சேர்ந்த இருவர், கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் சென்னை அயனாவரத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டிருந்தது கண்பிடிக்கப்பட்ட நிலையில், அதற்கும், இந்தக் கும்பலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? இம்மூவரின் பின்னணி என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறது, காவல்துறை.