சிவகாசி அருகே ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வைத்து பத்திரிகையாளர் ஒருவரை மர்ம நபர்கள் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஹவுசிங்போர்டு பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக்(46). இவர் வார இதழ் பத்திரிகையில் விருதுநகர் மாவட்ட செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த வார இதழ் நேற்று வழக்கம்போல வெளியானது. அதில் அந்த தொகுதியைச் சேர்ந்த அமைச்சருக்கும் அதிமுக எம்.எல்.ஏ ஒருவருக்கும் இடையே நிகழும் உட்கட்சி பூசல் குறித்து கட்டுரை வெளியாகியிருந்தது.
இதனிடையே நேற்று இரவு சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு கார்த்திக் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 7 பேர் ஹோட்டல் வாசலில் வைத்து கார்த்திக்கை கடுமையாக தாக்கியுள்ளனர். இரும்பு கம்பியால் தாக்கியதில், தலை, முகம், வாய் என பல இடங்களில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார் கார்த்திக்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் அமைச்சருக்கு தொடர்பு உள்ளதா அல்லது வேறு யாராவது தாக்குதல் நடத்தியுள்ளார்களா என்று மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பல்வேறு பத்திரிகை சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.