தமிழ்நாடு

சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணமிழந்த ப்ரவுசிங் சென்டர் முதலாளி தற்கொலை

சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணமிழந்த ப்ரவுசிங் சென்டர் முதலாளி தற்கொலை

நிவேதா ஜெகராஜா

சென்னையில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால், பிரவுசிங் சென்டர் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இச்சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்பேடு சீமாத்தமன் கோயில் தெருவை சேர்ந்தவர் தினேஷ். இவர் கோயம்பேடு சின்மயா நகரில் குளோபல் நெட் என்ற பெயரில் பிரவுசிங் சென்டர் நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உள்ளனர். நேற்றிரவு வீட்டின் ஹாலில் தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோயம்பேடு காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தினேஷ் செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கமுடையவர் என்பதும், கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் இழந்ததால் மனமுடைந்து மதுப்பழக்கத்திற்கு அடிமையானதும் தெரியவந்தது. கடனை திருப்பி தர முடியாததால் தினேஷ் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து தினேஷின் செல்போனை கைப்பற்றிய காவல்துறையினர், சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.