பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட சகோதரர்கள்
பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட சகோதரர்கள் PT Desk
தமிழ்நாடு

ஈரோடு: பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சகோதரர்கள்

webteam

ஈரோடு மாவட்டம் சென்னிமலை சாலையில் உள்ள செல்லப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர்கள் மனோகரன் - குகனேஸ்வரி தம்பதியர். இவர்களுக்கு ராஜகுரு மற்றும் தென்னவன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், மகன் ராஜகுருவிற்கு 14 வயது இருக்கும்போது, திடீரென கால்கள் மடங்கி நடக்க முடியாமல் போனது.

இதையடுத்து நரம்பியல் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒரு வாரத்திற்குப் பிறகு மீண்டும் நடக்க முடியாமலும் பேசுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பல கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு ராஜகுரு, பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், ராஜகுருவை தொடர்ந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு சகோதரர் தென்னவனும் அதே அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில், இருவரையும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று, ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்ட அனைத்து மருத்துவ சிகிச்சைகள் அளித்தும் அவர்கள் இருவரையும் மீட்க முடியவில்லை என்கின்றனர் பெற்றோர்.

தற்போது 35 வயதான நிலையில், இருவரும் குழந்தையை போன்றே வீட்டில் உள்ளனர். முன்னதாக மகன்கள் இருவரையும் மீட்டுவிட வேண்டும் என்பதற்காகவும் அவர்களை பராமரிக்கவும் வருவாய்த் துறையில் பணிபுரிந்த மனோகரன் தனது பணியை ராஜினாமா செய்ததோடு, தனது 62 வயதிலும் ராஜகுரு மற்றும் தென்னவனுக்குத் தேவையான பணிகளை செய்து வருகிறார்.

father

தற்போது, கோவையில் பார்கின்சன் பாதிப்பை சரிசெய்ய ரேடியேஷன் சிகிக்சை முறை வந்துள்ள நிலையில், அதற்கு பல லட்சம் (70 லட்சம்) ரூபாய் வரை செலவாகும் எனக் கூறப்படுகிறது. பார்கின்சன் பாதிப்பால் சகோதரர்கள் இருவரும் தங்களது இளமை காலத்தை வீட்டில் இருந்தே கழித்துள்ள நிலையில், அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் பெற்றோர்.

சிறுவயதிலேயே பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட இரு மகன்களையும் எப்படியாவது மீட்டு விடலாம் என்ற பெற்றோர்களின் நம்பிக்கை, தற்போது சிகிச்சைக்கான செலவினால் தடைபட்டுள்ளது. தந்தையின் அர்ப்பணிப்பும் தாயின் பாசமும், இரு குழந்தைகளையும் இவ்வளவு காலம் கடத்தி வந்த நிலையில், அரசு சிகிச்சைக்கான செலவை ஏற்க வேண்டும். தாங்களும் மற்றவர்களைபோல் யாரின் உதவியின்றி அடியெடுத்து வைக்கும் காலத்தை நோக்கி காத்திருப்பதாகக் கூறும் சகோதர்களின் கோரிக்கை நிறைவேறுமா? மீண்டு வருவார்களா?