நீரில் தத்தளித்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஆற்றுக்குள் இறங்கிய சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சென்னை பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்தவர்கள் ஜெகன், குமரேசன். சகோதரர்களான இவர்கள் ஜவுளி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்துள்ளனர். பின்னர் அனைவரும் அங்குள்ள வைகை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
அனைவரும் கரையோரத்தில் குளிப்பதற்கு தயாராக நின்று கொண்டிருந்த போது ஆற்றில் ஏற்கெனவே குளித்துக் கொண்டிருந்த மூன்று பெண்கள் தங்களை காப்பாற்றுமாறு அலறியுள்ளனர். இதனைக் கண்ட சகோதரர்கள் இருவரும் ஆற்றுக்குள் இறங்கி அவர்களை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.
ஆனால் நீர்சுழலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர். நீரில் தத்தளித்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றில் மணல் கொள்ளையர்கள் வெட்டி வைத்த குழிகளில் சிக்கியதால்தான் சகோதரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.