தமிழ்நாடு

பாஜக பேரணி நடப்பதால் பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு கேட்டு திருப்பூரில் மனு

webteam

திருப்பூர் அருகே பிரியாணி கடைக்கும் பிரியாணி அண்டாவிற்கும் பாதுகாப்பு கேட்டு பிரியாணி சங்கம் காவல்நிலையத்தில் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டமும் பேரணியும் நடைபெற்று வருகின்றன. அதன்படி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் நாளை திருப்பூரில் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணி திருப்பூரின் சிடிசி பகுதியில் ஆரம்பித்து பெரியகடை வீதி வழியாக செல்கிறது.

இதனிடையே திருப்பூரின் பெரிய கடை வீதி பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பிரியாணி கடைகள் இயங்கி வருகின்றன. பாஜகவினர் பேரணி அறிவித்துள்ள நிலையில், பிரியாணி சங்கத்தினர் திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

அதில், “வரும் 28 ஆம் தேதி பெரியக்கடை வீதி வழியாக பாஜகவினர் பேரணி செல்ல உள்ளனர். அதனால் எங்களது பிரியாணி கடைக்கும் பிரியாணி அண்டாவிற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர். 

கோவையில் கொல்லப்பட்ட சசிகுமார் என்ற இந்து முன்னணி பொறுப்பாளரின் இறுதி ஊர்வலத்தில் பிரியாணி அண்டா திருடப்பட்ட சம்பவத்தை அடுத்து, திருப்பூரில் இஸ்லாமியர்கள் பகுதியில் நடைபெறும் பேரணி என்பதால் அண்டாவுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.