தமிழ்நாடு

இங்கிலாந்து பவுண்டு இருக்கு இந்திய பணம் கிடைக்குமா? மோசடிக்கு முயன்ற ஈரானியர்கள்

webteam

பெரம்பலூர் அருகே தபால் நிலையத்தில் புகுந்து; ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஈரான் நாட்டைச் சேர்ந்த இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் செயல்பட்டு வரும் தபால் நிலையத்திலும் மற்றும் சித்தளி கிராமத்தில் செயல்பட்டு வரும் தபால் நிலையத்திலும் வெளிநாட்டைச் சேர்ந்த இருவர் அத்துமீறி அனுமதி இல்லாமல் உள்ளே நுழைந்து பணியில் இருந்த பெண்ணிடம் தங்களிடம் இங்கிலாந்து பவுண்டு உள்ளது அதற்கு இந்திய பணம் தர முடியுமா என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அங்கு பணியில் இருந்த பெண், அது போன்று இங்கு பவுண்டுகளை மாற்ற முடியாது என கூறியதால் வெளிநாட்டவர் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு அங்கிருந்து வெளியேறி டெல்லி பதிவு எண் கொண்ட கார் ஒன்றில் சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து சந்தேகமடைந்த தபால் நிலையத்தில் பணியாற்றும் பெண், காவல் துறையினருக்கு புகார் தெரிவித்ததை அடுத்து காவல் துறையினர் அவர்களை தேடிவந்தனர்.

இந்நிலையில் அதே இருவர் அரியலூர் சாலையில் உள்ள பூச்செடிகள் விற்கும் கடை ஒன்றிற்குச் சென்று வெளிநாட்டு பணத்தை கொடுத்து இந்திய பணம் கேட்டு அங்கிருந்த பெண்ணிடம் தகராறு செய்துள்ளனர். இதனைக் கண்டு அருகில் இருந்த கடைக்காரர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் இருவரையும் பிடித்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும்,; இவர்கள் இருவரும் ஏற்கனவே இதே போன்று விருதுநகர் மாவட்டம் பாளையம்பட்டி என்ற கிராமத்தில் உள்ள தபால் நிலையத்தில் டாலரை பணமாக மாற்றித் தரும்படி கேட்டு அங்கிருந்தவர்களின் கவனத்தை திசை திருப்பி 84,000 ரூபாய் பணத்தை திருடியதும் தெரியவந்தது.

இதனையடுத்து காவல் துறையினர் அவர்களிடம் இதுபோன்று வேறு ஏதும் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.