திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி தேவி (26). இவருக்கும் செம்புலிவரம் பகுதியை சேர்ந்த அசோக் குமார் 26 என்பவருக்கும் இம்மாத இறுதியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. போகிப் பண்டிகை திருநாளான இன்று அசோக் குமார் தமது வருங்கால மனைவி வைஷ்ணவி தேவியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, செங்குன்றம் அடுத்த தண்டல்கழனி பகுதியில் முன்னால் சென்ற ஆட்டோ ஒன்று திடீரென நிறுத்தியதால் இருசக்கர வாகனத்தை பிரேக் பிடித்தபோது வாகனத்தில் இருந்த வைஷ்ணவி தேவி நிலை தடுமாறி வலது புறமாக சாலையில் தவறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி வைஷ்ணவி தேவியின் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே வருங்கால கணவரின் கண் எதிரே பரிதாபமாக உயிரிழந்தார். அசோக் குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் உயிரிழந்த வைஷ்ணவி தேவி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், லாரி ஓட்டுனரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 10 நாட்களில் திருமணம் நடைபெற உள்ள இளம் பெண் வருங்கால கணவரின் கண்ணெதிரே விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.