உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் கடைபிடிக்கப்படுகின்றது. குழந்தையின் முதல் உணவான தாய்ப்பாலின் மகத்துவங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
தாய்ப்பால் என்பது ஒவ்வொரு குழந்தையின் வாழ்விலும் அடித்தளமாக கருதப்படுகிறது. குழந்தை பிறந்தநாள் முதல் 6 மாதங்கள் வரை, மருத்துவ குணங்கள் நிறைந்த தாய்ப்பாலை மட்டுமே குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என குழந்தைகள் நல மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 6 மாதங்களுக்குப் பிறகு 2 ஆண்டுகள் வரை ஊட்டச்சத்துகளுடன் தாய்ப்பாலையும் சேர்த்து குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.
பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் போன்ற சிறந்த உணவு இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை. சீரான கலவையில் தாய்ப்பால் கிடைப்பதால் குழந்தைக்கு எந்தப் பிரச்னையும் வராது. மாறாக மற்ற பாலினை குடிக்கும்போது தேவையற்ற சிக்கல்கள் பின்னாளில் குழந்தைகளுக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள்.
தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தை மட்டுமன்றி தாயுக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றன. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்மார்களின் அழகு பாதிக்கும் என்று கூறுவது, மூடநம்பிக்கையே என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தாய்ப்பால் கொடுத்தவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு மிகமிகக் குறைவு என்றும், தேவையற்ற கொழுப்பு கரையும் என்றும் கூறப்படுகிறது.
தாய்ப்பாலின் மகத்துவத்தை ஒவ்வொரு தாயும் அறிய வேண்டும் என்ற நோக்குடன், ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம் தாய்ப்பால் வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.