திருக்குவளையில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்
திருக்குவளையில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் Twitter
தமிழ்நாடு

“எந்தக் காரணமும் கல்வி கற்க தடையாக இருக்கக்கூடாது என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது” - முதல்வர்

webteam

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் முதல்கட்டமாக 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டிருந்தது. அதன் மூலம் 1,14,000 குழந்தைகள் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் அத்திட்டத்தின் தொடர்ச்சியாக அனைத்து நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 31,000 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் இன்று விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

cm stalin

அதன்படி இந்த திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாகை மாவட்டத்தில் கலைஞர் படித்த திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், இன்று குழந்தைகளோடு அமர்ந்து காலை உணவை உண்டு தொடங்கி வைத்தார்.

அதேபோல், அனைத்து கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ மற்றம் எம்.பி-கள் அவரவர் தொகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைக்குமாறு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் முதலமைச்சர் தொடங்கிய அதே நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் 31,000 அரசு பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

காலை உணவு திட்ட விரிவாக்கம்

இதில் திருக்குவளையில் திட்ட தொடக்கத்துக்குப்பின் பேசிய முதல்வர், “காலை உணவு திட்டத்திற்கு அரசு செய்வது நிதி ஒதுக்கீடு அல்ல; நிதி முதலீடு. உதவ யாரும் இல்லையென கலங்கும் மக்களுக்காக திமுக அரசு உறுதுணையாக உள்ளது. பலரது மகிழ்ச்சிக்கு காரணமாக நான் இருப்பதால், எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

உண்டு கொடுத்தோர், உயிர் கொடுத்தோர் என்பர். திமுக அரசு உயிர் கொடுத்துள்ளது. எந்தக் காரணமும் கல்வி கற்க தடையாக இருக்கக்கூடாது என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது. காலை உணவுத்திட்டத்தால் என் மனம் நிறைந்து மகிழ்கிறது. இத்திட்டத்தில் 31,000 அரசுப்பள்ளிகளிலுள்ள 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்” என்றார்.