தமிழ்நாடு

பள்ளிகளில் காலை உணவு- சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

பள்ளிகளில் காலை உணவு- சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

Sinekadhara

சென்னை மாநகராட்சியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு மேயர் தலைமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பள்ளிகளில் காலை உணவு உட்பட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்த நிலையில் 2022-23ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மேயர் பிரியா தலைமையில் நடந்த மாமன்ற கூட்டத்தில், வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவர் சர்பஜெயாதாஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, தமிழக அரசு அறிவித்த சொத்து வரி உயர்வுபற்றி பேச அனுமதிக்குமாறு அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். பட்ஜெட் தாக்கல் முடிந்தபின் அனுமதிப்பதாக மேயர் பிரியா கூறியதை ஏற்க மறுத்த அவர்கள், மாநகராட்சி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை வாசித்த மேயர், 2011ஆம் ஆண்டு கணக்கின்படி 66 லட்சமாக இருந்த சென்னையின் மக்கள் தொகை 88 லட்சமாக உயர்ந்திருப்பதாக குறிப்பிட்டார்.

மாநகராட்சி பள்ளிகளில் தன்னார்வலர்கள் மூலம் காலை உணவு வழங்கப்படும் என்றும் பாலின சமத்துவத்தை ஏற்படுத்த குழுக்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதியை 30 லட்சத்திலிருந்து 35லட்சம் ரூபாயாக அதிகரிப்பதாகவும் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.