தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளியில் பூத்துக் குலுங்கிய பிரம்ம கமலம் பூக்கள்

kaleelrahman

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அபூர்வ பிரம்ம கமலம் பூ போச்சம்பள்ளியில் பூத்துக் குலுங்கியது. பூவை ஊதுவர்த்தி ஏற்றி விவசாய குடும்பத்தினர் வணங்கினர்.

இளவேனில் காலத்தில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூக்கள், நள்ளிரவில் பூத்து அதிகாலையில் உதிர்ந்து விடும். அத்துடன் இந்தப் பூவின் வாசம் அந்த பகுதியையே ஈர்க்கும் வல்லமை கொண்டது. ஓர்க்கிட் வகையைச் சேர்ந்த இவை ஒரே செடியில் 40க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கக்கூடியது. இந்தப் பூ மிகவும் வாசனையுடன் இருக்கும். ஆனால் விரைவில் வாடிவிடும்.

இந்தப் பூ ஹிமாலாயாவிலேயே அதிகம் காணமுடியும். ஆனால் தற்போது இந்த மலரை சிலசமயங்களில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் மிக்க காலநிலைகளிலும் காண முடிகிறது. இந்நிலையில், போச்சம்பள்ளியை அடுத்துள்ள முல்லை நகர் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி (54) என்பவர் தனது வீட்டில் பிரம்ம கமல பூ செடியை வளர்த்து வருகிறார்.

இதையடுத்து ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் இந்த பூ, தற்போது பூத்துக் குலுங்குகிறது. நேற்று இரவு சுமார் 11 மணியளவில் இந்த அதிசய பூ பூத்தது. பூத்தவுடன் வீடு முழுவதும் வாசம் நிரம்பியது. இதையடுத்து வீட்டிலிருந்தவர்கள் கதவை திறந்து பார்த்தபோது வீட்டின் வெளியே வாராண்டாவில் வைத்திருந்த பிரம்ம கமலம் செடியிலிருந்து 4 பூக்கள் பூத்திருந்தது.

இதைக்கண்ட விஜயலட்சுமி மற்றும் குடும்ப உறிப்பினர்கள் ஊதுவர்த்தி ஏந்தி பயபக்தியுடன் வணங்கி தங்கள் குறைகளை நீக்க வேண்டிக்கொண்டனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஆர்வமுடன் வந்து பார்த்து பூவைத் தொட்டுக் கும்பிட்டு வணங்கினர்.