புத்தகப் பிரியர்களின் மனம் கவர்ந்த புத்தகக் கண்காட்சி சென்னையில் நாளை தொடங்குகிறது. 41-ஆவது ஆண்டாக நடக்க உள்ள இந்தப் புத்தக காட்சியில் ஒருகோடிக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.
சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய பள்ளியில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 41-ஆவது புத்தகக் காட்சி நாளை தொடங்கி வரும் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் வரவேற்பை பெற்று வரும் இந்தப் புத்தகக் காட்சிக்கு இந்த ஆண்டும் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களை சேர்ந்த 5 லட்சம் மாணவர்களுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. குழந்தைகள் மூலம் பெரியவர்களும் புத்தகக் காட்சிக்கு வருவார்கள் என்பதால், இந்த முறை கையாளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் 10,000 புதிய தலைப்புகளில் 10 லட்சம் நூல்கள் இடம்பெறவுள்ளன. மொத்தமாக 700க்கும் அதிகமான அரங்குகளில் ஒருகோடிக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
புத்தகக் காட்சி அரங்கில், 8 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்படுகிறது. இந்தச் சிலைக்கு அருகில் செல்ஃபி எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட உள்ளது.