Dog squad pt desk
தமிழ்நாடு

சென்னை: தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் - புரளி என காவல்துறை விளக்கம்

மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு. வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்

சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பள்ளி செயல்பட்டு வருகிறது. சிபிஎஸ்இ பாடப்பிரிவின் கீழ் இயங்கும் இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வரும் நிலையில், இன்று இந்த பள்ளி அலுவலகத்திற்கு இ-மெயில் ஒன்று வந்துள்ளது. அதில், இந்த பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அது வெடிக்கப் போவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

School students

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாங்காடு போலீசார், வகுப்பறையில் இருந்த பள்ளி மாணவர்களை திறந்த வெளியில் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் ஆவடியில் இருந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிக்கு விரைந்து வந்து வெடிகுண்டுகள் உள்ளதா என பள்ளி வளாகத்தில் முழுமையாக சோதனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தகவல் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கு வந்த பெற்றோர் தங்களது பிள்ளைகளை அழைத்துச் சென்றனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களின் தீவிர சோதனைக்குப் பிறகு வெடிகுண்டு இருப்பதாக கூறியது புரளி என தெரியவந்தது.

கடந்த மாதம் அண்ணா நகர், பூந்தமல்லி, திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவத்தையடுத்து தற்போது மீண்டும் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.