கடலூர் மாவட்டம் சிப்காட்டில் உள்ள ரசாயன ஆலையில் நேரிட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் ரசாயன ஆலை ஒன்று சிப்காட் பகுதியில் செயல்பட்டு வருகிறது. அங்கு திடீரென பாய்லர் வெடித்ததில், பணியில் இருந்த தொழிலாளர்கள் தீ விபத்தில் சிக்கினர். தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், சிக்கியிருந்த 17 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சிகிச்சை பலனின்றி பெண் உள்பட 4 பேர் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 13 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலையின் அலட்சியப் போக்கே விபத்துக்கு காரணம் என கூறி, அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் ஆகியோர், நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தொழிற்சாலைகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். ரசாயன ஆலையில் இருந்து புகை வெளியேறி வரும் நிலையில், அங்கே வேறு யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என ட்ரோன் மூலம் தேடும் பணி நடைபெற்றது. தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே பாய்லர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.