இந்த முறை ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து விலகி, திமுக சார்பில் ‘உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக அதிமுக சார்பில் நாராயணசாமி களமிறங்கியுள்ளார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் என மூன்று முதல்வர்களைத் தந்த தேனி மாவட்டத்தில் இருக்கும் போடிநாயக்கனூர் தொகுதி ஒரு நட்சத்திரத் தொகுதி. இரண்டு முதல்வர்களை எம்எல்ஏவாக தேர்வுசெய்த பெருமைக்குரிய தொகுதி இது 1989இல் ஜெயலலிதாவை முதன்முதலில் சட்டமன்றத்துக்கு அனுப்பிவைத்த போடி தொகுதி மக்கள், 2011இல் ஓ.பன்னீர்செல்வத்தை வெற்றிபெற வைத்தனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆரம்பக்களமாக இருந்தது தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தொகுதி. அங்கே 2001, 2006 என்று 2 தேர்தல்களில் பன்னீர்செல்வம் வென்றார். அது தனித்தொகுதியானதால், 2011இல் போடிநாயக்கனூர் தொகுதிக்கு மாறினார் பன்னீர்செல்வம். அவருக்கு 2011, 2016, 2021 என ஹாட்ரிக் வெற்றிகளைத் தந்தது போடிநாயக்கனூர். முதல் தேர்தலில் 30 ஆயிரம், 2016இல் 15ஆயிரம், 2021இல் 11 ஆயிரம் என்று வாக்கு வித்தியாசம் குறைந்துகொண்டே வரும்நிலையில், இந்த முறை திமுக வேட்பாளராகியிருக்கிறார் பன்னீர்செல்வம்.
பெரு விவசாயிகள், விவசாயக் கூலிகள், ஏலக்காய் தோட்டத் தொழிலாளர்கள், வர்த்தர்கள் மிகுந்த தொகுதி போடிநாயக்கனூர். தற்போது கிட்டத்தட்ட 2 லட்சத்து 61 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அமைச்சராகவும், முதல்வராகவும் இருந்த காலகட்டங்களில் கிட்டத்தட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான மக்கள் நலத் திட்டங்களைப் போடிநாயக்கனூருக்கு கொண்டுவந்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். ஓர் அரசு பொறியியல் கல்லூரி, முந்தல் மற்றும் போடி மெட்டுசாலை விரிவாக்கம் போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை.
ஆனாலும், மாம்பழக் கூழ் தொழிற்சாலை, போடியிலிருந்து சாக்குலூத்துக்கு வன சாலை அமைக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் கோரிக்கை. இந்த முறை ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து விலகி, திமுக சார்பில் ‘உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக அதிமுக சார்பில் நாராயணசாமி களமிறங்கியுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் கலையரசுவும், தவெக சார்பில் பிரகாஷும் களமிறங்கியிருக்கிறார்கள். இந்த முறை தேர்தலில் பரபரப்பு பஞ்சமிருக்காது.