திருப்பூரில் கணவன் - மனைவி ஒரே இடத்தில் மரணம் web
தமிழ்நாடு

ஒரே இடத்தில் இரண்டு சடலம்.. வாயில் இருந்த 'செல்பாஸ் மாத்திரை'! வெளியான அதிர்ச்சி பின்னணி?

ஆடு மேய்ப்பதற்காக காட்டுப்பகுதிக்குச் சென்ற கணவன் மனைவி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..நடுக்காட்டில் நடந்தது என்ன பார்க்கலாம்!

விமல் ராஜ்

செய்தியாளர் - சரவணகுமார்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சேனாபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி - சாமியாத்தாள் தன்பதில். இவர்களுடைய மகள் அபிநயா திருமணமாகி மதுரையில் வசித்து வருகிறார்.

மகன் வித்யாசாகர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு அதே ஊரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று காலை ஆடு மேய்க்க வீட்டின் அருகே உள்ள காட்டிற்கு வேலுச்சாமியும் அவரது மனைவி சாமியாத்தாளும் சென்றுள்ளனர். ஆடு மேய்க்கச் சென்றவர்கள் காலை உணவு சாப்பிட வரவில்லை என்பதால் வித்யாசாகர் தொலைபேசியில் அழைத்துள்ளார். இருவரும் போனை எடுக்காததால் நேரில் சென்று அழைத்து வர காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார் வித்யாசாகர்.

காத்திருந்த அதிர்ச்சி..

அங்கு, வேலுச்சாமியும் அவரது மனைவி சாமியாத்தாளும் தலை முகம் ஆகிய இடங்களில் கல்லால் அடித்த ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளனர். இதில் சாமியத்தாலின் கழுத்து பகுதியில் ஒரு வெட்டு காயம் இருந்துள்ளது. அதுமட்டுமின்றி இருவரின் வாயிலும் தென்ன மரத்திற்கு பயன்படுத்தக்கூடிய கொடிய விஷம் கொண்ட செல்பாஸ் மாத்திரை வாயில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வித்யாசாகர் பெற்றோரின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வெள்ளகோவில் போலீஸார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், வேலுச்சாமி சாமியாத்தாளை அடித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இருவரையும் வேறு யாராவது கொலை செய்தார்களா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆடு மேய்க்க காட்டுப்பகுதிக்குச் சென்ற கணவன்- மனைவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.