தமிழ்நாடு

நெடுந்தீவு அருகே 4 மீனவர்களின் உடல்கள் மீட்பு - மீனவத்தாயின் கண்ணீருக்கு பதில் என்ன?

Veeramani

நடுக்கடலில் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகு மூழ்கி ‌‌‌நான்கு மீனவ‌‌‌ர்கள் உயிரிழந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்ட மீன்பிடி கிராமங்களில் பதட்டமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

கடலுக்குப் போன மகன் கரை திரும்புவதை எதிர்பார்த்திருந்த இந்த தாய்க்கு மகன் இறந்த செய்திதான் கிடைத்துள்ளது. கடந்த 18 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கியம் ஜேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு, கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடலுக்குச் சென்றது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை விரட்டியதில் அனைத்து படகுகளும் திரும்பிய நிலையில் ஆரோக்கிய ஜேசுவின் படகு திரும்பவில்லை.

படகில் இருந்த மேசியா, நாகராஜன், செந்தில்குமார், சாம் ஆகியோரின் நிலை தெரியாததால், அவர்களை கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 3 நாட்களாக தேடிக் கொண்டிருந்தனர். நெடுந்தீவு அருகே செந்தில்குமார், சாம் ஆகியோரின் உடல்கள் நேற்று கிடைத்தநிலையில், எஞ்சிய இரு மீனவர்களின் உடல்கள் இன்று கண்டெடுக்கப்பட்டன. விசைப்படகின் மீது இலங்கை கடற்படையினர், முட்டி தாக்கியதாலேயே படகு சேதமடைந்து 4 மீனவர்களும் உயிரிழந்ததாக ராமநாதபுரம் மீனவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி தங்கச்சிமடத்தில் அனைத்து மீனவ அமைப்பினரும், 4 மணிநேரத்திற்கு மேலாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மகன் இறந்த துக்கத்தில் தாயும், உறவினர்களும் கதறியழுத சம்பவம் காண்போரை கலங்க வைத்தது.

இறந்தவர்களில் சாம் என்ற மீனவர் இலங்கை அகதி என்பதால் அவரது உடலை தவிர்த்து மற்ற மீனவர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்குப்பின் தாயகம் அனுப்பப்படும் என்று இந்திய துணை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையின் தாக்குதல்களுக்கும் மிரட்டலுக்கும் இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பதும் ராமநாதபுரம் மீனவர்களின் வலியுறுத்தலாக உள்ளது.

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் தமிழக மீனவர்கள் நான்கு பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.