வடமாநிலங்களில் சில உயிர்களை பறித்த ப்ளுவேல் விளையாட்டுக்கு தமிழகத்திலும் ஒரு உயிர் பலியாகிவிட்டது. செல்போன் மூலம் 50 படிநிலைகளை எட்டிய கல்லூரி மாணவர் விக்னேஷ், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மதுரை மாவட்டம் திருநகரை அடுத்த மொட்டைமலை பகுதியைச் சேர்ந்த ஜெயமணி - டெய்சி ராணி தம்பதியின் இளைய மகன் விக்னேஷ். கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்த அவர் சில தினங்களாக ப்ளுவேல் சேலஞ்ச் என்ற ஆபத்தான ஆன்லைன் விளையாட்டை விளையாடி வந்திருக்கிறார். அந்த விளையாட்டால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்ட விக்னேஷ், விளையாட்டு படிநிலையின் இறுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இரவு நேரத்தில் யாருமற்ற இடத்தில் நின்று செல்பி எடுப்பது, ப்ளுவேல் என்று உடலில் செதுக்கிக் கொள்வது, ரத்தத்தில் எழுதுவது, குடிப்பழக்கம் இல்லாத மாணவர் குடிப்பது என்று வித்தியாசமான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் விபரீதத்தை தாமதமாக உணர்ந்து பெற்றோரிடம் சென்று சொன்ன விக்னேஷ், அதன் பின்னர் சிலநாட்கள் விளையாடாமல் இருந்துள்ளார். ஆனால், மீண்டும் அந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிட்ட விக்னேஷ், தனது நண்பர்களிடம் சவால் விட்டு கடைசி கட்டத்தை விளையாடியபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. உலகம் முழுவதும் 130 பேரை பலிகொண்டுள்ள இந்த ஆன்லைன் ஆபத்தின் கரங்கள் தமிழகத்தையும் எட்டிவிட்டதால் பெற்றோரிடையே அச்சம் பரவியுள்ளது. ஆன்லைனிலும், ஆன்ட்ராய்ட் போன்களிலும் பலமணிநேரம் செலவிடும் பிள்ளைகளை கண்காணிப்பது அவசியம் என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள் காவல்துறையினர்.
விக்னேஷின் மரணத்தை தொடர்ந்து மதுரை மாவட்டம் முழுவதும் ப்ளுவேல் சேலஞ்ச் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் மாவட்ட எஸ்பி மணிவண்ணன். ஆயினும் ஆன்லைன் விளையாட்டுக்கு தங்கள் செல்லமகனை பறிகொடுத்துவிட்ட பெற்றோருக்கு அந்த உயிரை யாரும் திருப்பித்தரப்போவது இல்லை.
இனிமேலும் ஒருஉயிரை ஆன்லைன் விளையாட்டுக்கு பலிகொடுத்துவிடக்கூடாது என்ற உத்வேகத்துடன் செயல்படவேண்டிய தருணமாக இந்த நாள் அமைந்துவிட்டது.