ப்ளூவேல் விளையாட்டை தடை செய்வது தொடர்பான வழக்கை தாமாக முன்வந்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை இன்று விசாரிக்கிறது.
இந்தியா உட்பட உலகையே அதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் ஆழ்த்தியுள்ளது ப்ளூவேல் எனும் உயிர் பறிக்கும் இணையதள விளையாட்டு. உலகளவில் இதுவரை 130க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ப்ளூவேல் விளையாட்டால் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
இந்த ப்ளூவேல் விளையாட்டிற்கு சமீபத்தில் மதுரையை சேர்ந்த விக்னேஷ் என்ற சிறுவன் பலியாகிய சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ப்ளூவேல் கேம்மை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக ப்ளூவேல் விளையாட்டுக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, கிருஷ்ணமூர்த்தி என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்ய அனுமதி கோரியிருந்தார். ஆனால் இதற்கு அனுமதி வழங்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் ப்ளூவேல் விளையாட்டு குறித்து தாமாகவே முன்வந்து விசாரிப்பதாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை தெரிவித்தது. அதன்படி இன்று நடைபெறும் விசாரனையை தொடர்ந்து உயிரைப் பறிக்கும் ப்ளூவேல் விளையாட்டிற்கு இந்தியாவில் முடிவு கட்டும் வகையில் முக்கிய உத்தரவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.