காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சியில் மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சியில் கங்கை அம்மன் கோயில் குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இன்று விடுமுறை என்பதனால் அந்த ஊராட்சி சார்ந்த ஐந்து இளைஞர்கள் கோயில் குளத்துக்குள் சென்றிருக்கிறார்கள். அப்போது நகைப்பெட்டி மாதிரியான அளவில் ஒரு பெட்டி ஒன்று கிடைத்துள்ளது.
அதை கையில் எடுத்து வந்து கோயில் வளாகத்தில் அமர்ந்து பெட்டியை திறக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக மர்மபெட்டி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் 5 நபர்களும் வெவ்வேறு திசையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் அந்த ஊராட்சி பகுதியை சார்ந்த சூர்யா, திலீப் ராகவன், ஜெயராம், யுவராஜ், மற்றும் திருமால் ஆகியோர் பலத்த காயங்களுடன் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதில் சிகிச்சை பலனளிக்காமல் சூர்யா என்கிற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மகாபலிபுரம் மற்றும் திருப்போரூர் காவல் ஆய்வாளர்கள் வெடித்த பொருள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடித்த பொருளின் தன்மை குறித்து விசாரிக்க இருக்கிறார்கள். மர்மப் பொருள் வெடித்து ஒருவர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.