தமிழ்நாடு

பெண் காவலரிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் - பாஜக இளைஞரணி தலைவர் கைது

webteam

கள்ளக்குறிச்சியில் பெண் காவலரிடம் பணம்கேட்டு கொலை மிரட்டல் விடுத்த கள்ளக்குறிச்சி பாஜக இளைஞரணி தலைவர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி அடுத்த கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகள் சவிதா கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்த நிலையில் 3 ஆண்டுகளாக இவரும் கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் ரஞ்சித்குமார் (கள்ளக்குறிச்சி பாஜக இளைஞரணி தலைவர்) என்பவரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததாகவும், வங்கியில் சுமார் 4.80 லட்சம் ரூபாய் சொசைட்டி லோன் பெற்று இரண்டு லட்சத்தை ரஞ்சித்குமாரிடம் சவிதா வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள சர்தார் ஷெரீப் பஞ்சர் கடை அருகே நின்று கொண்டிருந்த சவிதாவை ரஞ்சித் குமார் வழிமறித்து முப்பதாயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றும், கொடுக்கவில்லை என்றால் கத்தியால் குத்தி கொலை செய்துவிடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சவிதா கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி காவல் ஆய்வாளர் சந்திரன் வழக்குப்பதிவு செய்து, பெண் காவலரிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த கள்ளக்குறிச்சி பாஜக இளைஞரணி தலைவர் ரஞ்சித்குமார் என்பவரை கைது செய்து, இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.