தமிழ்நாடு

'என்ன பிரச்னை இருந்தாலும் அவர்கள் எங்கள் நண்பர்கள்’- அதிமுக பற்றி சுதாகர் ரெட்டி

webteam

தமிழகத்தில் குண்டாயிசம் அதிகரித்துள்ளதாக விமர்சித்துள்ளார் சுதாகர் ரெட்டி.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தி.நகர் பாஜக அலுவலகத்தில் அவரது படத்திற்கு தமிழக பாஜகவின் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், நடிகை மதுவந்தி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை  செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுதாகர் ரெட்டி, “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இன்று வாஜ்பாய் பிறந்தநாள் நல்லாட்சி நாளாக கொண்டாடி வருகிறோம். கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆத்ம நிர்பர் பாரத்திற்கு வலிமையான அடித்தளமிட்டவர் வாஜ்பாய். அவர் பாதையில் இன்று மோடி தலைமையில் இந்தியா முன்னேறி வருகிறது. ஊழலற்ற ஆட்சியை வழங்கியவர் வாஜ்பாய். எதிரிகளே இல்லாதவர் வாஜ்பாய். இலவசக் கல்வி உள்ளிட்ட மக்களுக்கான பல திட்டங்களை தொடங்கியவர் வாஜ்பாய்.

தமிழகத்திலோ இந்த ஆட்சி குடும்பத்திற்காக, குடும்பத்தால் நடத்தப்படும் ஆட்சியாக இருக்கிறது. குண்டாயிசம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. கடந்த முறை ஊழலால் தரமற்ற பொங்கல் பொருட்களை இந்த ஆட்சி மக்களுக்கு வழங்கியது. ஆனால் இந்த முறை கரும்பு கூட இல்லாத பொங்கல் பரிசை வழங்கியுள்ளது இந்த ஆட்சி.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா வாகனம் தாகுதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். இது போலதான் இங்கு நிலை உள்ளது. உரிய நேரத்தில் உரிய முறையில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று எங்கள் மாநில தலைவர் சொல்லிவிட்டார். அதிமுக-வை பொறுத்தவரை அவர்களுக்குள் என்ன பிரச்சினை இருந்தாலும் அவர்கள் எங்கள் நண்பர்கள்.

டிசம்பர் 27ஆம் தேதி ஜே.பி.நட்டா வருவது கட்சியை வலுப்படுத்துவதற்காக மட்டுமே. அதிலும் குறிப்பாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பணிகளை பூத் வரை பணிகள் மேற்கொள்ளும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார்கள் உள்ளன. வழக்குகள் உள்ளன. அவர் பதவி விலகியிருக்க வேண்டும். அவரும் விலகவில்லை. முதலமைச்சரும் அவரை பதவியிலிருந்து நீக்கவில்லை'' என்றார்.