தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ள நிலையில், செங்கல்பட்டு, மதுரை பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நாளை மறுநாள் (மார்ச் 11) திருச்சியில் நடைபெறவிருக்கிறது. இந்த சூழலில் தான், விஜயை இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வைக்கும் வகையில், என்.டி.ஏ கூட்டணியில் அவரை இணைக்க பாஜக தரப்பில் இருந்து தீவிரமாக முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வழியாக கூட பாஜக விஜயுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியது. அதேசமயம் சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தேர்தல் பணிகளை காரணம் காட்டி அவர் செல்லவில்லை.
முன்னதாக, திமுகவை வீழ்த்த வேண்டும் எனக் கருதுபவர்கள் ஓரணியில் திரள வேண்டும் எனக் கூறி அதிமுக மற்றும் பாஜக கட்சியினர் தொடர்ந்து விஜயை தங்களது கூட்டணிக்கு அழைத்து வந்தனர். அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு முன் விஜயுடன் கூட்டணி வைக்க பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், ஆனால் தவெக ”முதல்வர் வேட்பாளர் விஜய்” என்பதில் உறுதியாக இருந்ததால் அக்கூட்டணி இறுதி செய்யாமல் முடியாமல் போனதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல, அதிமுக - பாஜக கூட்டணிக்கு பிறகும் விஜய்க்கு வெளிப்படையாகவே அக்கட்சிகளிடம் இருந்து அழைப்புகள் வந்தன. ஆனால், விஜய் எதற்கும் செவி சாய்க்கவில்லை.
இந்த சூழலில் தான், நேற்று பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் என்.டி.ஏ கூட்டணிக்கு அழைப்பு விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், திமுகக்கு எதிரான அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். ஓரணியில் திரள வேண்டும் எனவும் உண்மையாக திமுகவை தடுக்க விரும்பினால் அதிமுக–பாஜக கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்-ஐ அப்பதவியில் இருந்து நீக்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், ஊடகத்துறை பொறுப்பாளர் என்ற பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், எதற்காக விடுவிக்கப்பட்டிருக்கிறார் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை.