தமிழ்நாடு

கூட்டம் முடியுமுன்னே பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பாஜகவினர் போராட்டம்.. வேலூரில் பரபரப்பு

Sinekadhara

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த பாஜக பேனர், போஸ்டர் மாநகராட்சி ஊழியர்களால் கிழிக்கப்பட்டதையடுத்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் வேலூர் அடுத்த அரப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் பாஜக சார்பாக வால் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் நிகழ்ச்சி முடிவுறும் முன்னரே வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள மேம்பாலம் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த பாஜக போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

இதனையறிந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கிரீன் சர்க்கிள் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மிகுந்த போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தபோதும் பேனர்களை கிழித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும், மீண்டும் பேனர்களை ஒட்ட வேண்டும்; அதுவரை போராட்டம் தொடரும், எனக் கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

மேலும் இது அனுமதி பெற்று வைக்கப்பட்ட பேனர் என்றும், கட்சி வளர்வதை பார்த்து பயந்த திமுகவினர் ஏவிவிட்டுத்தான் இது நடந்திருப்பதாகவும் குற்றம் சாட்டினர். இதனையடுத்து மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு கிழிக்கப்பட்ட பேனர் மீண்டும் ஒட்டப்பட்டது.