பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பாதயாத்திரையை விமர்சித்தார். போதைப் பொருள்களை ஒழிக்க அறிவாலயத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என அவர் கூறினார். மத்திய அரசு போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தை உருவாக்கியதை பாராட்டிய அவர், தமிழ்நாட்டில் டாஸ்மாக் குறைக்கப்படாததை சுட்டிக்காட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது, அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ”ஜாதி, மத மோதல்கள் கூடாது, போதையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். ஆனால், போதைப் பொருட்களை விற்பதே அவரின் கூட்டணியில் இருக்கக்கூடியவர்கள் தான். போதையை ஒழிக்க வேண்டும் என்றால், வைகோ அறிவாலயத்தை நோக்கி தான் பாதையாத்திரை செல்ல வேண்டும்.
மத்திய அரசு 2020-ல் உலகமே வியக்கும் வகையில், போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தை உருவாக்கி பாகிஸ்தான் முதல் பல உலக நாடுகளில் இருந்து வரும் போதைப் பொருட்களை தடுத்து வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு தெருவில் இருந்து மற்றொரு தெருவிற்கு எடுத்துச் செல்லும் போதைப்பொருளைக் கூட தடுக்க முடியவில்லை. முதல்வர் ஸ்டாலின், போதையின் பாதையில் செல்ல வேண்டாம் என காணொளி வெளியிடுகிறார். போதை பொருளுக்கு எதிரான வைகோவின் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார். ஆனால், தமிழ்நாட்டில் டாஸ்மாக்-ஐ மூடுவதற்கோ அல்லது குறைப்பதற்கோ அவர் ஒன்றும் செய்யவில்லை. இவ்வாறு திமுக முரண்பாடுகளின் மொத்த வடிவமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ”காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அழிவு நோக்கி போய்க் கொண்டிருக்கிறது எனக் கூறியிருக்கிறார். அது அவருடைய ஒப்புதல் வாக்குமூலம். இது திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஆரம்பமாகிவிட்டது என்பதையே காட்டுகிறது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி கூட தமிழகத்தில் கடன்சுமை அதிகமாகிவிட்டது என்று கூறுயிருக்கிறார்.
அதன்படி, தமிழ்நாடு கடன் 27% தாண்டி எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொருவருவர் தலையிலும் 1.75 லட்சம் கடன் இருக்கிறது. இந்த நிலையில், அசுர சக்தியுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெல்லப்போவது உறுதி. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேசிய ஜனநாயகக் கூட்டணியை பார்த்து, "அடிமைக் கூட்டணி; அடிமைக் கூட்டணி" என அடிக்கடி கூறிவருகிறார். ஆனால், இந்தக் கூட்டணி அவர்களை அடித்து நொறுக்கக் கூடிய கூட்டணியாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.