சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது பாஜக என அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதும் அப்பதவி கடந்த 6 மாதங்களாக காலியாக இருந்தது. இந்நிலையில், பட்டியலினத்தைச் சேர்ந்த எல்.முருகனை தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “கோவையில் இந்து இயக்கங்களை சேர்ந்த ஆனந்த், சூரிய பிரகாஷ் ஆகியோர் தீவிரவாதிகளால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்களில் ஒரு சிலரை மட்டுமே காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவில்லை. கோவையில் அமைதி நிலவ வேண்டும். தீவிரவாத இயக்கங்களை சேர்ந்தவர்களை கைது செய்ய வேண்டும். இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதனை தடுக்க காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே தமிழகத்தில் பாஜக எம்.எல்.ஏ., எம்பிக்கள் இருந்துள்ளனர். கட்சியை வளர்க்க தொய்வின்றி சிறப்பாக பணி செய்கிறோம். பாஜக சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது. அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்” என்றார்.