தமிழ்நாடு

"ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் 2 கிலோ இறைச்சி வழங்குகிறது திமுக"- அண்ணாமலை புகார்

webteam

“ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு திமுக பணத்தை வாரி வழங்குகிறது” என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர், “அண்மையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திடீர் மறைவை அடுத்து இந்த தொகுதிக்கான இடைத்தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. திமுக ஆட்சியில் கடந்த 22 மாதங்களாக தமிழகம் எந்தவித வளர்ச்சியும் பெறவில்லை. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற, பணத்தின் மீது அக்கட்சி நம்பிக்கை வைத்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஜனவரி 29-ஆம் தேதி அன்று அக்கட்சியை சேர்ந்த அமைச்சர் கே என் நேரு மற்றும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் வாக்காளர்களுக்கு பண விநியோகம் வழங்குவது தொடர்பாக பேசிய ஆடியோவை நாங்கள் வெளியிட்டோம். மேலும் அதுகுறித்து மாநில தலைமை தேர்தல் ஆணையரிடம் ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் திமுகவைச் சேர்ந்த நிர்வாகியின் காரில் இருந்த டோக்கன் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடந்த வார இறுதியில் திமுகவினர் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் தலா இரண்டு கிலோ இறைச்சியை லஞ்சமாக வழங்கினர்.

தொடர்ச்சியாக அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு லஞ்சத்தை வழங்கி வருகின்றனர். அதிகாரத்தை அக்கட்சி தவறாக பயன்படுத்தி வருகிறது. இதனால் ஈரோட்டில் சுதந்திரமான தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. எனவே எங்களது புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது