தமிழ்நாடு

"மோடி உரக்கப் பேசினால் அமெரிக்காவே கேட்கும்" - பாஜக தலைவர் அண்ணாமலை

rabiyas

மோடி 2008இல் பிரதமராக இருந்திருந்தால் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கருத்தரங்கு சென்னை தி.நகரில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், '’இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டதால், பல தலைவர்கள் புறக்கணித்துள்ளனர். ஆனால் அவர்களும் பல்வேறு காலக்கட்டத்தில் இலங்கை மக்களுக்காக போராடியுள்ளனர். தமிழ்நாடு பாஜக வேண்டாத கட்சியாக, வேண்டாத கொள்கையாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் காலச் சக்கரத்தை மாற்றியமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் 2008ஆம் ஆண்டு மோடியை பிரதமராக மாற்ற வரம் கேட்டிருப்பேன்’’ என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ’’மோடி வைரம் என்று எனக்கு தெரியும், ஆனால் அவரைப் பற்றி யாரும் இங்கு பேசவில்லை. அதனால் நான் பேசவேண்டிய சூழல் உள்ளது. மோடி உரக்கப் பேசினால் அமெரிக்காவே கேட்கும். போர் உச்சக் கட்டத்தில் இருக்கும்போது நரேந்திர மோடி பிரதமராக இருந்திருந்தால் தமிழர்கள் யாரும் இறந்திருக்க மாட்டார்கள்.

அந்த காலக் கட்டத்தில் இந்தியா எடுத்த முடிவு மிகவும் தவறானது. இலங்கை பிரச்னைக்கான தீர்வை கொடுக்கின்ற ஒரே ஒரு மனிதர் நரேந்திர மோடியைத் தவிர யாரும் கிடையாது. பாஜக கட்சியை சேர்ந்தவன் என்று இதைக் கூறவில்லை. ஒரு மனிதனாக கூறுகிறேன். ஈழ தமிழ் மக்கள் இந்தியாவின்மீது கடும் கோபத்தில் இருந்தனர். 2009 போரில் இந்தியா தமிழர்களுக்கு ஆதரவு தராததால் நம்மை அவர்கள் நம்பாமல் இருந்தனர். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. யாழ்ப்பாணக் கலாசார மையத்தை மோடி கட்டிக் கொடுத்துள்ளார். இலங்கை தமிழர் விவகாரத்தில் மோடி சரியான வகையில் காய் நகர்த்தி வருகிறார். தனி ஈழம் உருவாக்கப்பட்டால் உலகத்தில் சிறிய நாடாக அதுதான் இருக்கும். இலங்கைக்கு இதுவரை 20,000 கோடி ரூபாய்க்கு மேல் இந்தியா உதவி செய்துள்ளது.

ஒரே ஒரு எம்.பியை வைத்துள்ள ரணில் விக்கிரமசிங்க இலங்கையில் பிரதமராகியிருக்கிறார். இதுதான் இலங்கையின் தேர்தல், அரசியலமைப்பு. நமது வெளியுறவுத் துறை அமைச்சர் சாதாரணமானவர் கிடையாது. இலங்கையின் அரசியலை அக்குவேறு ஆணிவேராக படித்தவர். எல்லாவற்றிற்கும் மேல் ஜெய்சங்கர் ஒரு தமிழர், தேர்தல் நடத்துவதற்கு இலங்கையில் காகிதம் இல்லை. உண்மையான கச்சத்தீவு ஒப்பந்தம் என்பது, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாக இருந்தாலும் அதைச்சுற்றி மீன்பிடிக்க நமக்கு உரிமை இருந்தது. அதைத்தான் பிரிவு 6 கூறுகிறது. அவசரநிலை காலக் கட்டத்தில் யாருக்கும் தெரியப்படுத்தாமல் மறைமுகமாக பிரிவு 6-ஐ ரத்து செய்தனர். தூக்கு தண்டனையில் இருந்த ஐந்து தமிழர்களை மீட்டார் மோடி. பாஜகவின் நிலைப்பாடு பிரச்னையை உருவாக்குவதல்ல, தீர்வு காண்பது’’ என்று கூறினார்.