சேராத இடத்தில் சேர்ந்தது தான் செய்த தவறென்றும், தற்போது சரியான இடத்தில் இருப்பதாகவும் இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்தார்.
பெரம்பலூரில் திமுக கூட்டணியின் பெரம்பலூர் தொகுதியின் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தரின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய வேட்பாளர் பாரிவேந்தர், “பெரம்பலூர் எனது மூதாதையர்கள் வாழ்ந்த இடம். எனவே இந்தத் தொகுதிக்கு நான் புதியவன் அல்ல. என்னுடைய குலதெய்வம் இங்கே இருக்கிறது.
2014ஆம் ஆண்டு தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டேன். சூழ்நிலை காரணமாக போட்டியிட்டேன். என்னைப் பார்க்கும் பலபேர் கடந்த முறை உங்களுக்கு வாக்களிக்க தவறிவிட்டோம் என்கிறார்கள். அதற்கு நான் சொன்னேன்., நீங்கள் வருத்தப்பட ஒன்றுமில்லை. நான் தான் தவறு செய்துவிட்டேன். வாக்களிக்காதது உங்கள் தவறல்ல.. போகாத இடத்திற்குப் போய்விட்டேன். போன அந்த இடத்தில் நான் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை. தமிழ்நாட்டை விட்டுவிட்டு, தாயை விட்டுவிட்டு, ஒரு மாயையை நோக்கி போய்விட்டேன்.
நாம் பெற்ற சுதந்திரத்தை 2016ல் பணமதிப்பிழப்பு என்பதன் மூலம் மோடி பறித்துவிட்டார். 2017ல் ஜிஎஸ்டி என்ற பெயரில் வேலைகளை பறித்துவிட்டார். 2018ல் தமிழ்நாட்டிலே 4 மாவட்டங்களில் கஜா புயல் தாக்கியபோது, மக்கள் நிலைகுலைந்து இருந்தபோது மு.க.ஸ்டாலின் தான் களத்தில் இறங்கி உதவினார். நான் எனது பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கட்டணத்தை தள்ளுபடி செய்தேன். ஆனால் ஆறுதல் கூட சொல்லாத கட்சியில் இருக்க வேண்டுமா என நினைத்தேன். அதனால்தான் நான் பள்ளிப்பருவத்திலேயே விரும்பிய திமுகவில் தற்போது இருக்கிறேன். மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியை மாற்ற வேண்டிய நேரம் இது” என்று தெரிவித்தார்.