சென்னை பனையூர்
சென்னை பனையூர் pt web
தமிழ்நாடு

அண்ணாமலையின் இல்லத்தில் பாஜக ஆய்வுக்குழு... ஆளுநருடனும் சந்திப்பு!

Angeshwar G

கடந்த 21 ஆம் தேதி சென்னையை அடுத்த பனையூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வீட்டில் அனுமதியின்றி 100 அடி உயர பாஜக கொடிக்கம்பம் நடப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில் அக்கொடிக்கம்பத்தை காவல்துறையினர் அகற்ற முயன்றனர். அப்போது பாஜகவினர் தடுத்த நிலையில் காவல்துறை மற்றும் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பாஜக கொடிக் கம்பம் அகற்றம் - வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம்

கொடிக்கம்பத்தை அகற்ற வந்த கிரேன் வாகனத்தின் கண்ணாடியை சேதப்படுத்திய விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள் மீது ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாஜக நிர்வாகிகள் 5 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான பாஜக முக்கிய நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியையும் அக்கரை சந்திப்பு பகுதியில் கைது செய்தனர். பாஜக தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனை அடுத்து தமிழக அரசால் பாஜகவினர் எதிர்கொண்டு வரும் பிரச்னைகள் தொடர்பாக ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழுவை கடந்த 22 ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா நியமித்தார்.

அக்குழுவில் சதானந்தா கவுடா, நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபால் சிங், ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி, நாடாளுமன்ற உறுப்பினர் பி.சி.மோகன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். தமிழ்நாட்டில் பாஜக தொண்டர்களிடம் மாநில அரசு பாகுபாடு காட்டுவதாகவும், இதுகுறித்து இக்குழு தமிழகத்தில் ஆய்வு நடத்தி, விரைவில் அறிக்கை அளிக்கும் எனவும் ஜெ. பி.நட்டா தெரிவித்திருந்தார்.

பாஜக கொடிக் கம்பம் அகற்றம் செய்யப்பட்டபோது

இந்நிலையில் இக்குழு சென்னை பனையூரில் உள்ள அண்ணாமலையின் இல்லத்திற்கு வந்து இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளவர்களின் குடும்பத்தினரையும் இன்று காலை முதல் சந்தித்தனர்.

அமர் பிரசாத் ரெட்டி, எஸ்.ஜி.சூர்யா ஆகியோரது இல்லத்திற்கு இந்த குழுவினர் நேரடியாக சென்றனர். இதனை அடுத்து சம்பவம் நடந்த பகுதியான கொடிக்கம்பம் நடப்பட்டிருந்த இடத்தை பார்வையிட்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகைக்கும் நேரில் சென்று எழுத்துப் பூர்வமான புகாரையும் அளித்துள்ளனர். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாஜகவினரிடமும் நேரடியாக இக்குழு ஆலோசனையில் ஈடுபடுமென்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை தற்போது பாதயாத்திரையில் இருப்பதால் பாஜக மூத்த தலைவர்கள் இக்குழுவோடு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.