திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரி பாஜக, இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் காவல் துறையினரின் தடுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு பாஜகவினர் மலையேற முயன்றனர். இதில் இரு காவலர்கள் காயமடைந்திருக்கின்றனர்.
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இத்தகைய சூழலில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மதுரை ஏழுமலை சேர்ந்த இராம ரவிக்குமார் என்பவர் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள உச்சி பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மன்றத்தில் தீபம் ஏற்றக்கூடாது; அது மோட்ச தீபம் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தலைமையிலான அமர்வு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபத்தை ஏற்ற போதிய முன்னேற்பாடுகள் செய்யாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ராம ரவிக்குமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் கோவிலின் செயல் அலுவலர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் காணொளி வாயிலாக ஆஜராக உத்தரவிட்டு வழக்கை 5 மணிக்கு ஒத்தி வைத்தார். அரசுத்தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி, "முன் ஜாமின் கேள்விப்பட்டிருக்கிறோம். முன் கூட்டிய நீதிமன்ற வழக்கை இப்போதுதான் பார்க்கிறேன். இது விசாரணைக்கு உகந்ததல்ல" என தெரிவித்தார்.
அதற்கு நீதிபதி, 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படும் நிலையில், 6.05 மணிக்கு இந்த வழக்கை விசாரணைக்கு எடுப்பது முன்கூட்டியே வழக்கை விசாரிப்பது ஆகாது எனத் தெரிவித்தார். பின்னர் மீண்டும் சுமார் 06.07 மணியளவில் விசாரணைக்கு வந்தபோது, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததை அடுத்து, மனுதாரர் 10 நபர்களுடன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணிற்கு சென்று கார்த்திகை தீபத்தை ஏற்றவும், மத்திய தொழிலக பாதுகாப்பு காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இதனையடுத்து மதுரையில் இருந்து 67 வீரர்கள் மத்திய தொழிலக பாதுகாப்பு காவல்துறையினர் திருப்பரங்குன்றத்திற்கு சென்றனர். இதற்கிடையே இந்த உத்தரவிற்கு தடைகூறி மதுரை நிர்வாக அமர்வு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர் முறையீடு செய்தார். இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதி நாளை முதல் வழக்காக இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார்.
இத்தகைய சூழலில் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரவின் குமார் அறிவித்திருக்கிறார்.
செய்தியாளர்களைச் சந்தித்த ராம ரவிக்குமார் நீதிமன்ற தீர்ப்பை தமிழ்நாடு அரசு மதிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் விமர்சித்திருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சண்முகம், "நீதிபதி சுவாமிநாதன் இந்துத்துவ சக்திகளுக்கு ஆதரவாக தீர்ப்பு அளிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார். சர்ச்சையை உருவாக்கியிருப்பது நீதிபதிதான். அவர் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறைப்படி புகார் அளிக்க முடிவு செய்திருக்கிறோம். இந்த நீதிபதி மக்களுக்கு விரோதமாக அல்லது மக்கள் மத்தியில் பகைமையை உருவாக்கும் வகையில் தீர்ப்புகளை வழங்கிக்கொண்டு இருக்கிறார். நீதித்துறை ஒழுங்கிற்கு உட்பட்டதாக அவரது நடவடிக்கைகள் இல்லை. எனவே அவர்மீது தலைமை நீதிபதியிடம் புகார் அளிப்பது என்று கட்சியின் சார்பாக முடிவுசெய்திருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
திமுக ஆட்சி ஆன்மீகத்துக்கு எதிரான ஆட்சி என்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார். நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ததற்கு தமிழ்நாடு பாஜக கண்டனம் தெரிவித்திருக்கிறது.