ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி திருச்செந்தூர் அருகே பரப்புரை மேற்கொள்ள வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது பாரதிய ஜனதாவினர் கல்வீசி தாக்குதல் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்க நல்லூரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மூன்றாவது நாளாக வைகோ பரப்புரை மேற்கொண்டார். அப்போது பாரதிய ஜனதா மாவட்டச் செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் தலைமையிலான கட்சியினர் வைகோவுக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக உடன்குடி பஜாரில் தயார் நிலையில் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து அவரை மாற்றுப்பாதையில் செல்லும்படி காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்த வைகோ திட்டமிட்ட பாதையிலேயே சென்றார். அங்கு பாரதிய ஜனதாவினரை கண்டதும் பிரதமர் நரேந்திர மோடியை போல கருப்புக் கொடியை கண்டு பயந்து ஓட மாட்டேன் என வைகோ பேசினார். இதனால் ஆவேசமடைந்த பாரதிய ஜனதாவினர், மதிமுகவினருடன் மோதலில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வைகோ மீது கல்வீசவும் முயன்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த பாரதிய ஜனதாவினர் 6 பேர் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.