தமிழ்நாடு

“வேல்யாத்திரை” நடத்தி தமிழகத்தை ரத்தக் களரியாக்க பாஜக முயற்சி : கே.எஸ்.அழகிரி

Veeramani

கடந்த காலத்தில் சூலாயுதத்தினால் ஏற்பட்ட விளைவுகளைப் போல, வேல் யாத்திரை மூலம் சமூக அமைதியைச் சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேட தமிழக பா.ஜ.க. முயற்சி செய்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கடந்த காலங்களில் மகாத்மா காந்தியடிகளின் கையில் ராமர் இருந்தவரை அவர் பாதுகாப்பாக இருந்தார். அத்வானி கைக்கு இராம பிரான் மாறிய பிறகு நாடு முழுவதும் ரத்தக்களரி ஏற்பட்டு நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழக்கிற நிலை ஏற்பட்டது.

அதேபோல, கிருபானந்த வாரியார் பிரச்சாரத்தில் முருக வழிபாட்டின் மூலம் தமிழகத்தில் பக்தர்கள் பெருகி மகிழ்ச்சியோடு இருந்தார்கள். ஆனால், முருகன் பெயரை வைத்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர், வேல் யாத்திரை நடத்தி தமிழகத்தில் ரத்தக் களரியை ஏற்படுத்த தூபம் போட்டு வருகிறார்.

கடந்த காலத்தில் சூலாயுதத்தினால் ஏற்பட்ட விளைவுகளைப் போல, வேல் யாத்திரை மூலம் சமூக அமைதியைச் சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேட தமிழக பா.ஜ.க. முயற்சி செய்கிறது. இந்த முயற்சிகளை ஜனநாயக, மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கையுள்ள சக்திகள் முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.” என்று கூறியுள்ளார்.