தேர்தல் நேரத்தில் 2000 ரூபாயை ஓட்டுக்காக கொடுப்பதையே தான் குறிப்பிட்டு கருத்து கூறியதாக தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
தை பொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசி அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. சுயநலத்திற்காகவும் தேர்தல் ஆதாயத்திற்காகவும் பொங்கல் பரிசை ரூ.2500 ஆக உயர்த்தி அறிவித்துள்ளார் என்று மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். பலரும் முதல்வரின் பொங்கல் பரிசுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை பேசிய வீடியோ ஒன்று வைரலானது. அதில், ''தமிழக மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் ரூ.2,000 ஆக தருவதுதான் தமிழக அரசியல். ரூ.2 ஆயிரத்தை நம்பி 5 ஆண்டை தமிழக மக்கள் அடகு வைத்து விடக்கூடாது'' என்று கூறியிருந்தார். பொங்கல் பரிசைக் குறிப்பிட்டே அண்ணாமலை இந்தக் கருத்தை கூறியதாக பலரும் பதிவிட்டனர். அப்படி அவர் பொங்கல் பரிசை குறிப்பிட்டிருந்தால், அது கண்டனத்துக்குரியது என்று அதிமுக எம்.எல்.ஏ. செம்மலையும் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தேர்தல் நேரத்தில் 2000 ரூபாயை ஓட்டுக்காக கொடுப்பதையே தான் குறிப்பிட்டு கருத்து கூறியதாக தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து பதிவிட்டுள்ள அண்ணாமலை, ''தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு ரூபாய் 2500 கொடுக்க இருப்பதை நான் எதிர்ப்பதுபோல, கோயம்புத்தூரில் நான் சொன்னதாக, தவறாக சித்தரித்து கூற முயற்சிக்கிறார்கள், அதை பிரசுரமும் செய்கிறார்கள். தேர்தல் நேரத்தில் 2000 ரூபாயை ஓட்டுக்காக கொடுப்பதை, அப்படிப்பட்ட அரசியலை பாஜக என்றும் விரும்பாது, அதை என்றும் செய்யாது என்று நான் கோயம்புத்தூரில் பேசியதை தவறாக சித்தரித்திருக்கிறார்கள்.
நான் கூறிய ஓட்டுக்காக கொடுக்கும் 2000 ரூபாயையும், பொங்கல் பரிசாக அரசாங்கம் வழங்கும் 2500 ரூபாயையும் ஜோடித்து, மக்களை குழப்புகின்றனர். உண்மை என்றும் புரிய வேண்டும், பொய்கள் யாவும் அழிய வேண்டும். வாழ்க, வளர்க தமிழ்நாடு'' என பதிவிட்டுள்ளார்