மக்களைவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பாமக - அதிமுக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது
நாடாளுமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ள சூழ்நிலையில், கூட்டணி, தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. அதிமுக - பாஜக - பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கப் போவதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதற்கான பேச்சுவார்த்தையில் மூன்று கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
இதற்கிடையே இன்று சென்னை சென்னை கிரவுன் பிளாசா ஹோட்டலில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சென்னை கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு வருகை தந்தனர். அவர்களை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டு பாமக - அதிமுக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பேச்சுவார்த்தையின் போது அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உடன் இருந்தனர்.
முன்னதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது பாஜக- அதிமுக இடையிலான கூட்டணி இறுதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியிருந்தன. ஆனால் அவரின் சென்னை வருகை இன்று காலை திடீரென ரத்து செய்யப்பட்டது. அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்ட போதிலும் பியூஷ் கோயல் திட்டமிட்டப்படி சென்னை வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அதிமுக - பாஜக - பாமக ஆகிய கட்சிகளின் கூட்டணி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.