திமுக நிர்வாகி, கொல்லப்பட்ட பாஜக நிர்வாகி கோப்பு படம்
தமிழ்நாடு

வேலூர் | பாஜக பிரமுகர் அடித்துக் கொலை.. திமுக நிர்வாகிகள் கைது.. கொதிக்கும் அண்ணாமலை!

ஊராட்சியில் உள்ள பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து புகார் அளித்து வந்த பாஜக நிர்வாகியைக் கொலை செய்த திமுக பிரமுகர்கள் ..

சண்முகப் பிரியா . செ

கே.வி.குப்பம் அடுத்த நாகல் பகுதியை சேர்ந்த 47 வயதான நபர் விட்டல் குமார். இவர் வேலூர் மாவட்ட பாஜக ஆன்மீக ஆலய மேம்பாட்டு பிரிவு துணை தலைவராக இருந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 16ம் தேதி மாலை மனைவியை வீட்டில் விட்டுவிட்டு வெளியே கிளம்பிச் சென்றுள்ளார். அவர் வெளியே போன 20 நிமிடத்திலேயே விட்டல் குமார் குடியாத்தம் - காட்பாடி சாலையிலுள்ள சென்னாங்குப்பம் சுடுகாடு அருகில் உடல் முழுக்க பலத்த ரத்த காயங்களுடன் கிடப்பதாக அவரது உறவினர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற அவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சுமார் இரண்டு மணி நேரங்களிலேயே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பிரேதப் பரிசோதனை முடிந்து உடல் ஒப்படைக்கப்படும்போது, பா.ஜ.க-வினர் ஏராளமானோர் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு விட்டல் குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்து, போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

நாகல் ஊராட்சியில் உள்ள பிரச்சனைகள் குறித்து விட்டல் குமார் தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட் என்பவருக்கும் இவருக்கும் பிரச்னை இருந்ததாகவும் அவர்தான் அடித்துக் கொலை செய்திருப்பார் என்றும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இச்சம்பவத்தை கண்டித்து காவல் துறையில் புகார் அளிப்பட்டு பாஜக தரப்பில் போராட்டமும் நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகள்

இந்நிலையில், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், விட்டல் குமாருக்கும், தி.மு.க-வைச் சேர்ந்த நாகல் ஊராட்சி மன்றத் தலைவரான பாலாசேட் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகத் தெரியவந்தது. ஊராட்சி நிர்வாகத்தின் முறைகேடுகள் மற்றும் ஊராட்சிக்குள் நிலவும் பிரச்னைகள் குறித்து அடிக்கடி மாவட்ட நிர்வாகத்திடம் விட்டல் குமார் புகார் தெரிவித்து வந்ததால் ஊராட்சி மன்றத் தலைவர் பாலாசேட்டுவிடம் இருந்து தொடர்ச்சியாக விட்டல் குமாருக்குக் கொலை மிரட்டல்களும் வந்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் பாலாசேட்டுவையும், அவரின் மகனும் ஊராட்சி செயலாளருமான தரணிகுமாரையும் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் கடந்த 20ம் தேதி விட்டல் குமாரை அடித்து கொன்றதாக சந்தோஷ்குமார், கமலதாசன் ஆகிய இருவர் காட்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில் காவல் துறையினர் தொடர்ந்து இவ்வழக்கு குறித்து விசாரித்து வந்தனர்.

இதனையடுத்து நேற்றைய தினம் இக்கொலை வழக்கு தொடர்பாக நாகல் ஊராட்சி மன்ற தலைவர் திகமுவை சேர்ந்த பாலா சேட் அவருடைய மகனும் பில்லாந்திப்பட்டு ஊராட்சி செயலரான தரணிகுமார் ஆகிய இருவரையும் கைது செய்த காவல் துறையினர் காட்பாடி அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பாலா சேட்டின் மற்றோரு மகனான வழக்கறிஞர் ராஜேஷ் குமாரை தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது 'எக்ஸ்' தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``தமிழகம் முழுவதும் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. நீதிமன்ற வளாகம், அரசு அலுவலகம் என எந்த இடத்திலும் பொதுமக்களின் உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது. தி.மு.க-வோ, தனது கட்சியில் சமூக விரோதிகளுக்குப் பதவியும், அதிகாரமும் கொடுத்து வருகிறது. ஒவ்வொரு முறையும் தி.மு.க-வினர் குற்றம் செய்யும்போதும், காவல்துறை நடவடிக்கை எடுக்க, நாங்கள் தொடர்ந்து வலியுறுத்த வேண்டியிருக்கிறது.

பா.ஜ.க-வினரின் உயிருக்கு ஆபத்து நிலவும் நிலையில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், தி.மு.க கட்சியின் ஒரு பிரிவைப் போல் காவல்துறையினர் செயல்படுவது வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் தினமும் ஒன்றுக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. காவல்துறையினரின் பணி, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதே தவிர, தி.மு.க-வினரின் அராஜகத்துக்குத் துணை நிற்பதல்ல. ஆளுங்கட்சி அடுத்த தேர்தலில் மாறும். ஆனால், காவல்துறையின் கடமை மாறப்போவதில்லை என்பதை உணர்ந்து, தமிழகக் காவல்துறையினர் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.