மாணவர்களின் மூக்குத்தி முதல் கழற்றிவிட்டு தேர்வு எழுத வேண்டுமென்றால் மூக்குத்தியில் பிட்டு பேப்பரை வைத்து எடுத்துச் செல்ல முடியுமா என்ற சிறு அறிவு கூட இல்லாமல் நீட் தேர்வை நடத்தி வருகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்களிடம் நீட் தேர்வு குறித்து பேசிய சீமான் "பாடம் அதே தான். பாடம் நடத்தும் பேராசிரியர்களும் அதே தான். ஆனால் தேர்வு முறை மட்டும் மாறினால் எப்படி? நீட் எனும் கொலை கருவியால் மாணவர்களின் உயிர் போவதை தடுத்து நிறுத்த உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். சிறுவயதில் இருந்து தான் மருத்துவர் ஆக வேண்டும் என்பது அனிதா போன்ற தங்கைகளின் கனவு, அதை நீட் தடுக்கிறது" என்றார்.
மேலும் " வெளி மாநிலத்தில் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு பிட் பேப்பர் தருவதை அனைவரும் பார்த்திருக்கிறோம். மாணவர்களின் மூக்குத்தி முதல் கழற்றிவிட்டு தேர்வு எழுத வேண்டுமென்றால் மூக்குதியில் பிட்டு பேப்பரை வைத்து எடுத்து செல்ல முடியுமா என்ற சிறு அறிவு கூட இல்லாமல் நீட் தேர்வை நடத்தி வருகிறார்கள்" என்றார் சீமான்.தொடர்ந்து பேசிய அவர் "நீட் தேர்வை முறைப்படுத்த வேண்டும் என்றால் முதல் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலும் நீட் தேர்வுக்கான பயிற்சியை வழங்க வேண்டும்.புதிய கல்விக் கொள்கையின் மூன்றாம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைத்தால் கொத்துக்கொத்தாக பிஞ்சி பிள்ளைகள் கருகி விடுவார்கள்"
"நீட் தேர்வு எழுதாமல் மருத்துவர்களாக இருப்பவர்களை ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் பணம் செல்லாது என்று கூறியது போன்று மருத்துவர்களை வெளியேற்ற வேண்டும். நீட் தேர்வு போன்ற அனைத்து எம்எல்ஏக்களுக்கும் எம்பிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தேர்வு எழுத வைத்தால் நாட்டில் மிகச் சிறந்த அமைச்சர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்" என்றார் சீமான்.