தமிழ்நாடு

”தமிழக வேலை, தொழில், வணிகம் தமிழருக்கே என சட்டமியற்றுக”– தமிழ்த்தேசிய பேரியக்கம் போராட்டம்

Veeramani

தமிழ்நாட்டு வேலைகள், தொழில், வணிகம் ஆகியவற்றை தமிழருக்கே உறுதி செய்து, தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்றக் கோரி சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம் நடத்தியது.

சென்னை பாரிமுனை, கடற்கரைச் சாலை சந்திப்பிலுள்ள பாரிமுனை கட்டடத்தின் கீழே நடைபெற்ற இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. அருணபாரதி தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி, காவிரி உரிமை மீட்புக் குழுவை சேர்ந்தவர்களும், தமிழ்த்தேசிய அமைப்புகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

இந்த போராட்டம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்த்தேசிய பேரியக்கம், “தமிழ்நாடு மிகவேகமாக அயலார்மயமாகி வரும் நிலையில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் இதனை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகின்றது. இந்நிலையில், தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ள தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தவாறு தமிழ்நாட்டின் தனியார் துறைகளில் 75 விழுக்காடு தமிழருக்கே என்ற கோரிக்கையை இன்னும் ஏன் செயல்படுத்தவில்லை என்ற அறச்சீற்றத்தோடு இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

தமிழ்நாடு அரசுத் துறை, தமிழ்நாடு அரசின் தொழில், வணிகத்துறை அனைத்திலும் நூறு விழுக்காடு வேலை மண்ணின் மக்களுக்கே வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள், அதன் தொழில் – வணிக நிறுவனங்கள் அனைத்திலும் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும், அவற்றில் பத்து விழுக்காட்டிற்கு மேல் வேலையில் உள்ள வெளி மாநிலத்தவர் அனைவரையும் வெளியேற்ற வேண்டும்.

தனியார் துறையில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும், தமிழ்நாட்டில் மண்ணின் மக்களுக்கு வேலை பெற்றுத் தரவும் - தமிழ்நாட்டுத் தொழில் முனைவோர்க்குக்குத் தொழிலாளிகளைத் தரவும் “தமிழர் வேலை வழங்கு வாரியம்” அமைக்க வேண்டும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில் முனைவோர்க்கும், தொழில் – வணிக நிறுவனங்களுக்கும் மானியங்கள் உட்பட ஊக்குவிப்புத் திட்டங்களையும் பல சலுகைகளையும் அரசு செயல்படுத்த வேண்டும். வெளி மாநில – வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மின்சாரம், நிலம், வரி போன்றவற்றில் அளிக்கும் சலுகைகளை நீக்க வேண்டும். வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் தொழில் – வணிக நிறுவனங்களைத் தொடங்கிட தமிழ்நாடு அரசு உரிமம் வழங்கக் கூடாது, அவர்கள் சொத்துகள் வாங்கத் தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும். மிசோரம் – நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களில் வெளி மாநிலத்தவருக்கு வரம்புகட்ட நடைமுறையில் உள்ள உள் அனுமதி அதிகாரம் (Inner Line Permit) தமிழ்நாடு அரசுக்கு வேண்டும் ஆகிய கோரிக்கைகள் இப்போராட்டத்தில் முன்வைக்கப்பட்டன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு தனி அலுவலர் இரா. இராம்பிரதீபனை நேரில் சந்தித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

போராட்டத்தையொட்டி சமூக வலைத்தளங்களில் #தமிழ்நாடுவேலைதமிழருக்கே மற்றும் #TamilnaduJobsForTamils ஆகிய ஹேஷ்டேக்குகளை வெளியிட்டு ட்ரெண்ட் செய்தனர்.