பிஹாரில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் சூழலில், மொத்தமுள்ள 121 தொகுதிகளில், இந்தியா கூட்டணி சார்பில் 126 வேட்பாளர்கள் போட்டியிடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் சட்டமன்றத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் 121தொகுதிகளில், 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 122 பேர் பெண்கள் மற்றும் 1,192 பேர் ஆண்கள்.இத்தொகுதிகளில் உள்ள 3.75 கோடி தகுதியான வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிட 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2.25 லட்சம் அதிகாரிகள் தேர்தல் பணிகளை கவனிக்க உள்ள நிலையில், 2 லட்சம் துணை ராணுவத்தினர் மற்றும் பிஹார் காவல் துறையினர் பாதுகாப்பை உறுதிசெய்வர். பிஹாரில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் சூழலில், மொத்தமுள்ள 121 தொகுதிகளில், இந்தியா கூட்டணி சார்பில் 126 வேட்பாளர்கள் போட்டியிடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வைஷாலி, பச்வாரா, ராஜபக்கர், பிஹார் ஷரிப் மற்றும் பெல்தெளர் ஆகிய 5 தொகுதிகளில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சிபிஐ கட்சிகளின் வேட்பாளர்கள் களம்காண்கின்றனர். இதுதவிர 73 தொகுதிகளில் ஆர்.ஜே.டி. வேட்பாளர்களும், 24 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும், CPIML வேட்பாளர்கள் 14 இடங்களிலும், சிபிஐ வேட்பாளர்கள் 5 இடங்களிலும் போட்டியிடுகின்றனர்.
அதேபோன்று, என்.டி.ஏ. கூட்டணியை பொறுத்தவரையில், ஐக்கிய ஜனதாதளம் கட்சி 57 இடங்களிலும், பாஜக 48 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி கட்சி14 இடங்களிலும் களம் காண்கின்றன. பிஹாரில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்டநட்சத்திர வேட்பாளர்கள்களம் காணுகின்றனர். 121 தொகுதிகளில், முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவின் ரகோபூர், அவரது சகோதரர் தேஜ் பிரதாப் யாதவின் மகுவா, துணை முதலமைச்சர்கள் சாம்ராட் சவுத்ரி போட்டியிடும் தாராபூர், விஜய்குமார் சின்ஹா போட்டியிடும் லக்கிசராய், பாடகி மைதிலி தாக்குர் போட்டியிடும் அலி நகர் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முசாபர்பூர் மற்றும் குர்ஹானி தொகுதிகளில் அதிகபட்சமாக 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். போரே, பர்பட்டா, அலாவுலி தொகுதிகளில் தலா 5 பேர் மட்டுமே களமிறங்குகின்றனர்.
இதற்கிடையே, இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.