crackers
crackers pt desk
தமிழ்நாடு

சென்னை தீவுத்திடலில் மிகப்பெரிய பட்டாசு சந்தை - நாளை முதல் விற்பனை தொடக்கம்

webteam

தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு பலகாரங்களோடு பட்டாசுக்கும் முக்கிய இடமுண்டு. வானில் உயரமாக வண்ண வண்ணமாக வெடித்து சிதறும் அவுட் பட்டாசுகள் முதல் கையில் சுத்தி விளையாடும் மத்தாப்பு வரை ஒவ்வொருவரும் வித விதமாக பட்டாசுகளை வாங்கிச் செல்வார்கள். இதனால் பட்டாசு விற்பனையாளர்களுக்கு இது கொண்டாட்டமான காலமாகவே இருக்கும்.

சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசு வாங்கிச் செல்வதற்காக தீவுத்திடலில் சுமார் இரண்டரை லட்சம் சதுரடி பரப்பளவில் பிரம்மாண்ட பட்டாசு சந்தை அமைக்கப்படவுள்ளது.

Crackers market

55 பட்டாசுக் கடைகள் கொண்ட இந்தச் சந்தையில் கடந்த ஆண்டுகளில் இல்லாத பாதுகாப்பு அம்சங்கள் இந்தமுறை சேர்க்கப்பட்டுள்ளன. எளிதில் தீப்பற்றாத வகையில் கடைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு கடைகளுக்குமிடையே பத்து அடி வரை இடைவெளி விடப்பட்டுள்ளது. கடைக்கு வரும் நபர்களை கண்காணிக்க ஓவ்வொரு கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வழக்கமாக பட்டாசுக்கடைகளில் இருப்பது போல் வாளிகளில் தண்ணீர், மண், தீயணைப்பான் போன்ற பொருட்களோடு கடைகளில் புகை வந்தாலே அதனை கண்டறியும் சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன.

pattasu shop file

இந்த ஆண்டு பட்டாசு விற்பனை சுமார் பன்னிரண்டு கோடி ரூபாய் வரை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், நிறைய கடைகள் இருப்பதால் பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த பட்டாசுகளை தேடி வாங்கலாம். மேலும் தனிநபர் ஆதிக்கம் இல்லாததால் நியாய விலையில் மக்கள் விரும்புகின்றவாறே பட்டாசுகள் விற்பனை இருக்கும் என்கின்றனர் வியாபாரிகள்.

இந்நிலையில் அடுத்த மாதம் 12ஆம் தேதி தீபாவளிக்கான பட்டாசு விற்பனை நாளை முதல் தொடங்கவுள்ளது. பிறகு என்ன? தீவுத்திடலுக்குச் செல்வோமா?