திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அப்பொறுப்பில் இருந்து விரைவில் விடுவிக்கப்படுவார் என தகவல் வெளியாகி இருக்கிறது. திமுக தலைமை மட்டத்தில் மாற்றம் நடக்க இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விடுவிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.. என்ன நடக்கிறது என்று விரிவாக பார்க்கலாம்.
திமுக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் மறைவுற்றார். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த அன்பழகன் மறைவுற்ற பிறகு, துரைமுருகனுக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது. 2020ம் ஆண்டே பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்ட நிலையில், கட்சியின் சீனியர் தலைவராக இருக்கும் துரைமுருகனுக்கு தற்போது 87 வயதாகிறது.
இந்த நிலையில்தான் வயது மூப்பு காரணமாக துரைமுருகனை அந்த பொறுப்பில் இருந்து விடுவித்துவிட்டு, திமுக வழிகாட்டும் குழு என்ற ஒரு குழுவை உருவாக்கி, அதில் துரைமுருகன், ஐ. பெரியசாமி மற்றும் பொன்முடி ஆகியோரை நியமிக்க கட்சி தலைமை முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத்துறை பறிக்கப்பட்ட நிலையில், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்க திட்டமிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
திமுகவில் 50 ஆண்டுகளாக எம்எல்ஏவாகவும், பல முறை அமைச்சராகவும் துரைமுருகன் இருந்துள்ளதால், இளையவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக கட்சி விதியின்படி திமுக பொதுக்குழுவில்தான் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார். ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டு மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வாகி இருந்தார் துரைமுருகன். இந்த நிலையில், துரைமுருகன் மாற்றப்படும் பட்சத்தில், பொறுப்பு பொதுச் செயலாளராக ஆ. ராசா அல்லது டி.ஆர்.பாலு நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
ஆண்டுதோறும் செப்டம்பர் 17ஆம் தேதி திமுக முப்பெரும் விழா கொண்டாடப்படும். இந்த நிலையில் நடப்பு ஆண்டில் இந்த விழா நடப்பதற்குள், பொறுப்பு பொதுச்செயலாளர் மற்றும் கூடுதலாக ஒரு துணைப் பொதுச் செயலாளர் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று திமுக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், புதிதாக பொறுப்பேற்கும் பொதுச் செயலாளருக்கு தேர்தல் பணிகள் பெரும் சவாலாக இருக்கும் என்றும் தெரிகிறது.