தமிழ்நாடு

பிடதி டூ கைலாசா - நித்தி போட்ட பக்கா ப்ளான்.

பிடதி டூ கைலாசா - நித்தி போட்ட பக்கா ப்ளான்.

subramani

தனிப்பட்ட வாழ்வில் துன்பங்களை சந்திக்கிற மனிதர்கள்., வெறுப்பு விரக்தி வெறுமையினை சந்திக்கிற சூழலில் அவர்கள் ஆறுதலுக்காக ஏதேனும் ஒன்றை பற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது., பெரும்பாலும் கடவுள் நம்பிக்கையும் அது சார்ந்த தேடலும் துவண்டு போன வாழ்வில் சற்றே ஆறுதல் தருவதாக நம்புகிறார்கள் மனிதர்கள். இந்தச் சூழலை பயன்படுத்தி ஆதாயம் அடைந்த சாமியார்கள் ஏராளம். இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுமைக்கும் இது பொது விதி.

இவ்வகையில் கடந்த பத்து ஆண்டுகளில் அதிகமாக சர்ச்சைக்குள்ளான சாமியார்களின் பட்டியலில் நித்யானந்தாவுக்கே முதலிடம்… கைலாசா என்ற புதிய நாடொன்றை உருவாக்கி அதில் தனது தனி ராஜியத்தை உருவாக்கிக் கொண்டதாக சொல்லிக் கொள்ளும் நித்தியானந்தா கேட்பாரின்றிக் கிடந்த காலமொன்று இருந்தது.

நினைத்தாலே முக்தி தரும் தலம் என நம்பப்படும் ஆன்மீக பூமியான திருவண்ணாமலை தான் நித்யானந்தா பிறந்த ஊரு. 1978 ஆம் ஆண்டு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த நித்யானந்தாவிற்கு அவரது தந்தை வைத்த பெயர் ராஜசேகரன். பிறந்த சில தினங்களில் நித்யானந்தாவின் ஜாதகத்தை கணித்த ஜோதிடர் ஒருவர் அசந்து போயிருக்கிறார்., நித்யானந்தாவின் தந்தையை அழைத்து இது ராஜ துறவியின் ஜாதகம் எனச் சொன்னாராம் அவர். அதன் அர்த்தத்தை அப்போது யாராலும் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

தனது 12’வது வயதிலேயே குண்டலினியை எழுப்பி ஆன்மீக பாய்ச்சல் காட்டியிருக்கிறார் நித்யானந்தா. இது பற்றி தனது சுயசரிதையில் நித்யானந்த தெரிவித்திருக்கிறார்.

பின் தனது 17வது வயதில் குடும்பத்தை துறந்து இந்தியா முழுக்க ஆன்மீகத் தேடலுக்காக பயணம் மேற்கொண்ட நித்யானந்தா குமரி முதல் இமையம் வரை பல்வேறு ஆன்மீக தலங்களுக்குச் சென்று ஒரு தேசாந்திரியாக திரிந்திருக்கிறார். துவக்கத்தில் இவருக்கு ஆன்மீக குருவாக இருந்தவர்கள் மாதாஜி குப்பம்மாள் மற்றும் ரகுபதியோகி. இவ்விருவரும் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள்.

இந்த ஆன்மீகப் பயணத்தின் தேடல் ஒரு இடத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது அவருக்கு. கேதார் நாத் சென்ற நித்யானந்தாவிற்கு பாபாஜி அருட்காட்சி அளித்ததாகவும் அவர் தான் தனக்கு பரமஹம்ச நித்யானந்தா என பெயர் சூட்டியதாகவும் நித்தி குறிப்பிட்டிருக்கிறார். நித்யானந்தா என்ற பெயருக்கு பரிபூரணமானவன் அல்லது நித்ய ஆனந்தம் கொண்டவன் என்று பொருள்.

ரமண மஹரிஷி, ராமகிருஷ்ண பரம ஹம்சர், சாரதா தேவி ஆகியோரை தனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட நித்யானந்த பிறகு திருவண்ணாமலை திரும்பினார். தான் கற்றுக் கொண்ட வாழ்வியலின் நெறிகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க நினைத்த நித்யானந்தா அதற்காக என்ன செய்வதென்று யோசித்தார். அப்போது உதித்தது தான் பிடதி ஆசிரமம்.

ஆம் 2003 ஆம் ஆண்டு பெங்களூரு அருகே உள்ள பிடதி என்ற இடத்தில் தனது முதல் ஆசிரமத்தை துவங்கினார் நித்யானந்தா. சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் துவங்கப்பட்ட அந்த ஆசிரமம் பின்னாளில் இந்திய ஊடகங்களின் தலைப்புச் செய்தியாகும் என யாரும் அப்போது கணித்திருக்கவில்லை.

துவக்கத்தில் பக்தர்கள் தரும் சொர்ப பணத்தில் ஆசிரமம் இயக்கப்பட்டது, பிடதி மூலம் நித்யானந்தா மக்களுக்கு ஆன்மீக போதனைகளை வழங்கி வந்தார். ஆன்மீக வழிகாட்டுதல்களைக் கொடுத்து வந்தார். அதற்கு கிடைத்த வரவேற்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது. ஆசிரமம் அசுர வளர்ச்சி அடைந்தது., லட்சக்கணக்கில் பிறகு பணம் வசூலிக்கத் துவங்கினார் அவர்.

அதிரடி வளர்ச்சியாக நித்யானந்தாவின் ஆசிரமம் 33 நாடுகளில் 1200 கிளைகளைத் துவங்கி ஆன்மீக ஆலமரமாக ஆழமாக வேர் பிடித்து நின்றது. அத்துடன் சர்ச்சைகளும் முளைக்கத் துவங்கின.

இந்தியத் தலைமையிடமாக பிடதியும், அமெரிக்காவின் தலைமையிடமாக லாஸ் ஏஞ்சல்ஸும் செயல்பட்டது.

இந்நிலையில் பிரபலங்களின் பார்வை நித்யானந்தா மேல் படவே அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் கூடவே தொழிலதிபர்கள் என பலரும் ஆசிர விசிட் அடிக்கத் துவங்கினர். தனக்கு காலம் சாதகமாக இருப்பதை உணர்ந்த நித்யானந்தா அதனை மேலும் பலமுள்ளதாக்க விரும்பினார். அதே காலகட்டத்தில் தான் பிரபல வார இதழில் ’கதவைத் திற காற்றும் வரட்டும்’ என உற்சாகமான ஆன்மீகத்தொடர் ஒன்றை எழுதினார். கூடுதலாக ஒரு தொலைக்காட்சியில் வாரம் ஒரு முறை ஆன்மீக நிகழ்ச்சியொன்றையும் நடத்தினார்.

வெளிநாட்டு பக்தர்கள் வரவு கூடியது, பிறகென்ன நித்யானந்தா வாழ்வில் டாலர் மழைதான்., குறுகிய காலகட்டத்திற்குள் 1000 கோடி சொத்துக்கு அதிபதியானார் நித்யானந்தா.

பலரது கண்களுக்கும் உறுத்தலாக இருந்த நித்யானந்தாவின் ஆன்மீக வாழ்வில் திருப்புனைக் காட்சி வெளியானது., ஆம் 2010 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியொன்று நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா இருந்த வீடியோவை வெளியிட்டது.

வீடியோவைப் பார்த்த பலரும் கொதித்து எழுந்தனர், தியானந்தா ஆசிரமத்தின் முன் இந்து அமைப்பினர் பலர் கூடி முற்றுகையிட்டனர்., ஆசிரமம் சூறையாடப்பட்டது. ஓடி ஒளிந்தார் நித்யானந்தா. விசாரணையில் தான் ஆண்மை இல்லாதவன் தனக்கு ஒன்பது வயது பையனுக்கு உள்ள அளவு மட்டுமே ஆண்மைத் தன்மை உண்டு என பதில் சொன்னார். வழக்கு விசாரிக்கப்பட்டது. முடிவில் வீடியோவில் இருந்தது நித்யானந்தா தான் என உறுதி செய்தது பெங்களூரு காவல் துறை., கூடவே நித்யானந்தாவின் மருத்துவ சோதனையும் நித்யானந்தாவின் வாதத்துக்கு எதிராகவே அமைந்தது. ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

நித்யானந்தாவை பின் தொடர்ந்த பலரையும் அதிர்ச்சி அடையச் செய்த அந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டதை அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி கண்டித்தார். அந்த வீடியோவை அந்த தொலைக்காட்சி நிறுவனம் படம் பிடிக்கவில்லை எனவும் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்த லெனின் கருப்பன் தான் அந்த வீடியோவை ரகசியமாக எடுத்தார் என்றும் பிறகு தெரியவந்தது. இது பற்றி லெனின் கருப்பன் கூறுகையில், ”தான் ஒரு துறவி என கூறி வந்த நித்யானந்தா பெண்களுடன் இருப்பது தெரியவந்த போது தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் அதனால் தான் அந்த வீடியோவை எடுத்ததாகவும்” பேட்டி கொடுத்தார். மேலும் அதன் காரணமாக நித்யானந்தா தன்னை கொலை செய்ய முயற்சி செய்வதாகவும் அவர் குற்றச்சாட்டுகளை வைத்தார்.

2011-ல் ஆட்சி மாற்றம் நடந்தது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நித்யானந்தா ரஞ்சிதாவுடன் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கங்கள் கொடுக்கத் துவங்கினார். அதற்கு முன்பு தன்னைப் பற்றி பத்திரிக்கைகள் எழுதக் கூடாது எனக் கூறி ஒரு முறையீட்டு மனுவையும் நீதிமன்றத்தில் கொடுத்திருந்தார் நித்யானந்தா.

இதற்கிடையில் 2500 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தாவிற்கு பொறுப்பு கொடுக்கப்பட்டது. இந்த இளைய ஆதீன பொறுப்பை கொடுத்தவர் தற்போது மதுரை ஆதீனமாக இருக்கும் அருணகிரி நாதர். இதற்கு பல்வேறு ஆன்மீக மடங்கள் மற்றும் இந்து அமைப்புகளிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பிறகு, பத்திரிக்கையாளர்களை அழைத்து நித்யானந்தா தன்னை மிரட்டி ஏமாற்றி அந்த பொறுப்பை பெற்றுக் கொண்டதாகவும் அதனை தான் திரும்ப பெறுவதாகவும் அருணகிரி கூறினார். ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளாத நித்யானந்தா நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் பல்லாயிரம் ஏக்கர் நிலம் மற்றும் சொத்துக்கள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நித்யானந்தாவின் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில்., தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதால் தான் அவர் ரகசியமாக தப்பிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டே அவரது பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டது. மேலும் வழக்கு முடியும் வரை அதனை புதுப்பிக்க முடியாது என நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருந்த நிலையில் நித்யானந்தா இப்போது எங்குள்ளார் என்பது உறுதியாக தெரியவில்லை.

நித்யானந்தா வடமாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என கர்நாடக ஊடகங்கள் பலவும் விவாதித்து வரும் நிலையில் அவர் சாலை மார்க்கமாக நேபாளம் வழியாக தப்பி இருக்கலாம் என்றும் தற்போது நித்யானந்தா இங்கிலாந்தில் உள்ள கெய்மர் தீவில் பதுங்கி இருக்கக் கூடும் என கருதும் நிலையில் தான் அதிரடியாக தனி நாட்டை உருவாக்கி அதற்கு கைலாசா என பெயர் வைத்திருப்பதாக நித்யானந்தாவின் கைலாசா இணைய தளம் தெரிவிக்கிறது.

உண்மையில் உலகின் பெரு முதலாளிகள் பலரும் தங்களுக்கு சொந்தமாக சிறிய அளவிலான தீவுகளை வாங்குவது வழக்கம். ஆனால் அதற்கு தனி நாடு அந்தஸ்து என்பதெல்லாம் சர்வதேச விதி முறையில் இல்லை. கிட்டத்தட்ட 900 ஆண்டுகளாக இயங்கிவரும் வாடிகனுக்கு தனி நாடு அந்தஸ்து இன்றளவும் இல்லை.

இந்நிலையில் நித்யானந்தா ஈக்குவடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி தனி கொடி தனி அரசாங்கம் தனி நாடு என அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியானது பலருக்கும் ஆச்சயர்த்தை ஏற்படுத்தியது. இது ஒரு ஏமாற்று வேலையாகத் தான் இருக்க முடியும் எனவும் விமர்சனங்கள் எழுந்தது. தனி நாட்டினை ஈக்குவடார் அரசு மறுத்ததோடு மட்டுமல்லாமல் அவரே அந்த செய்திக்கு முற்றுப் புள்ளியும் வைத்தார். தனி நாடு குறித்த செய்திகள் ஓய்ந்த நிலையில்தான் அடுத்தடுத்து நித்யானந்தாவின் வீடியோக்கள் வெளியானது.

அந்த வீடியோக்களில் நித்யானந்தாவின் பேச்சு மிகவும் வித்தியாசமாகவும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது. ஏதோ ஒருவகையில் லட்சக்கணக்கான மக்களை கவரும் வகையில், அதாவது கேட்க வைக்கும் வகையில் அவரது பேச்சுக்கள் இருந்தன. மிகவும் கிண்டலாகவும், ஆன்மீக தொனியிலும் அவர் பேசி வருகிறார். தினந்தோறும் அவரது வீடியோவுக்காக பலரும் இங்கு காத்திருக்கிறார்கள்.

அவர் மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், அவர் இருக்கும் இடத்தினை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அரசாங்கமே அவரை கண்டுபிடிப்பது தங்களுக்கு சிரமமாக உள்ளது என தெரிவித்து விட்டது. இத்தனை சர்ச்சைகளுக்கும் மத்தியில் கூலாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் நித்யானந்தா.

இதனை நம்பி பலரும் கைலாசாவின் குடியேற விண்ணப்பித்திருப்பது வியப்பு. உண்மையில் தனி நாடு என்றால் அதற்கு தனி ராணுவம், அந்நிலத்தின் மக்கள் சர்ந்த உரிமைகள் என பல கட்டுப் பாடுகளும் விதி முறைகளும் உண்டு. ஐநா’வின் ஒப்புதல் பெறுவது அத்தனை எளிய காரியம் இல்லை. எனவே அவ்வப் போது வீடியோக்களில் தோன்றி கைலாசாவின் தேசத் தந்தை போல உரையாற்றிவரும் நித்யானந்தா எங்கிருக்கிறார் என்ன செய்கிறார் என்ற உண்மை விரையில் வெளிச்சத்திற்கு வரும்.


வீடியோ :